நாசாவின் விண்வெளி திட்டத்தில் சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரராக, விமானப்படை பைலட் குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஜூன் 8ம் தேதி விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்கிறார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்சு சுக்லா(40). இந்திய விமானப்படையில் பைலட்டாகவுள்ளார். இவர் பல்வேறு போர் விமானங்களில் 2000 மணி நேரத்துக்கு மேல் பறந்து அனுபவம் பெற்றவர்.
இவரை விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக இஸ்ரோ தேர்வு செய்தது. தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்துக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் நாசா, ஆக்சியோம் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு வரும் ஜூன் 8ம் தேதி அனுப்புகிறது. விண்கலத்தின் கமாண்டராக நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனை பெகி விட்சன் உள்ளார். இவருடன் செல்ல குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வாகியுள்ளார். போலந்தை சேர்ந்த வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி -விஸ்நியூஸ்கி மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த வீரர் டிபோர் காபு ஆகியோரும் இந்த கலத்தில் விண்வெளி செல்கின்றனர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய வீரர் விண்வெளி வீரர் சென்று தங்குவது இதுவே முதல் முறை. இவர்கள் 14 நாட்கள் விண்வெளியில் இருப்பார்கள்.
இது குறித்து சுபான்சு சுக்லா கூறுகையில், ‘‘ சர்வதேச விண்வெளி மையத்தில் நான் பெறும் அனுபவத்தை இந்திய மக்களுடன் பகிர்ந்து கொள்வேன். விண்வெளி மையத்தில் யோகா செய்யவும் திட்டமிட்டுள்ளேன். நான் விண்வெளிக்கு செல்வது தனிப்பட்ட பயணமாக இருந்தாலும், இது 140 கோடி இந்தியர்களின் பயணம்’’ என்கிறார்.
முன்னதாத, கடந்த 1984ம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா, ரஷ்யாவின் சோயுஸ் கலத்தில் விண்வெளிக்கு சென்றார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியர் ஒருவர் விண்வெளிக்கு பறப்பது இதுவே முதன்முறை.