வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நேற்று காலை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி தற்பொழுது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது.
இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 19 ஆம் தேதி காலை நிலவக்கூடும்.
இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து 20ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது 21ம் தேதி மேலும் புயலாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் 22ம் தேதி காலை நிலைபெறக்கூடும்.
“17.03.2022: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.
18.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
19.03.2022, முதல் 21.03.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரைஅடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.