சவுதி அரேபியா இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா அளிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா , பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட 14 நாட்டை சேர்ந்தவர்களுக்கு தற்காலிகமாக விசா அளிப்பதில்லை என்கிற முடிவு ஜூன் மாதம் இறுதி வரை நடைமுறையில் இருக்கும்.
பிளாக் விசா என்று அழைக்கப்படும் இந்த விசாவை பயன்படுத்தி சவுதி அரேபிய நிறுவனங்கள் மொத்தமாக பல நாடுகளில் இருந்து தொழிலாளர்களை பணிக்கு எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தன. இனிமேல், இந்த 14 நாடுகளில் இருந்து சவுதி நிறுவனங்கள் மறு உத்தரவு வரும் வரை, ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியாது. ஏற்கனவே, இந்த விசாவில் பணியில் இருப்பவர்களின் விசா நீட்டிக்கப்பட தடையில்லை.
சவுதி அரேபிய அரசின் இந்த முடிவால், கட்டுமானத்துறை அந்த நாட்டில் வெகுவாக பாதிக்கப்படவுள்ளது. இந்த 14 நாடுகளில் இருந்துதான் கட்டுமான ஊழியர்களை சவுதி நாட்டு நிறுவனங்கள் வேலைக்கு எடுத்து வந்தன. இதனால், வெளிநாட்டு ஊழியர்களும் கட்டுமான நிறுவனங்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. இந்த தடைக்கான காரணம் குறித்து சவுதி அரேபியா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
தடை விதிக்கப்பட்ட 14 நாடுகள்: இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா , எகிப்து, அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிஷியா, இந்தோனேஷியா, ஈராக், ஜோர்டான், ஏமன் , மொராக்கோ