தமிழில் முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. இவரது நடிப்புக்கு யாரும் விளக்கம் அளிக்க தேவையில்லை. நடிப்பு ராட்சசி என்று உலக நாயகனால் பாராட்டப்பட்டவர். கடந்த 2000ம் ஆண்டு மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை ஊர்வசி திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2001ம் ஆண்டு மகள் பிறந்தார். மகளுக்கு தேஜலட்சுமி என்று பெயர் சூட்டி வளர்த்தனர். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக 2008ம் ஆண்டு கணவர் ஜெயனை ஊர்வசி பிரிந்தார்.
தற்போது, ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி 24 வயதாகிறது. சுந்தரியல்லவோ ஸ்டெல்லா என்ற மலையாள படத்தில் அறிமுகமாகிறார். இதற்கான , செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் மனோஜ் கே. ஜெயன், ஊர்வசி, தேஜலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஜெயன் உருக்கமாக சில விஷயங்களை சொன்னார்.
அவர் கூறுகையில், ‘என் வாழ்க்கையில் இன்று மிகுந்த மகிழ்ச்சியான நாள். நான் எனது மகளை சென்னையில் இருந்து அழைத்து செல்லும் போது, அவளுக்கு 7 வயதாகியிருந்தது. ஒரு தந்தையாக என் மகள் நன்றாக படிக்க வேண்டும். நல்ல வேலை பார்க்க வேண்டும். திருமணம் முடிக்க வேண்டுமென்பதுதான் ஆசை. ஆனால், திடீரென்று நடிக்க வேண்டுமென அவள் முடிவெடுத்தாள்.
இந்த முடிவை என் மகள் எடுத்த போது, முதலில் ஊர்வசியிடத்தில் அனுமதி வாங்கு என்றுதான் நான் கூறினேன். ஒரு வேளை என் மகளை சினிமாவுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று ஊர்வசி கூறியிருந்தால், நானும் அனுமதித்திருக்க மாட்டேன். முதலில் எனது மகளும், ஊர்வசியும் கதை கேட்டார்கள். அவர்கள் ஓகே சொன்ன பிறகே, நான் கேட்டேன். எனக்கும் கதை பிடித்திருந்தது.
படத்தில் நடிக்க ஊர்வசியின் அனுமதி கிடைத்ததும், சென்னை வந்து ஊர்வசியை சந்தித்து எனது மகள் ஆசி வாங்கினாள் அதே போல, எனது இரண்டாவது மனைவி ஆஷாவும், தேஜலட்சுமியுன் நல்ல நண்பர்கள். எனவே, எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை.’
இவ்வாறு மனோஜ் கே. ஜெயன் தெரிவித்தார்.