பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தியது. போர் சமயத்தில் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்தன.
இந்தியாவின் இராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைக்க துருக்கிய சோங்கர் ட்ரோன்களும் பாகிஸ்தான் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே தற்போது துருக்கியை புறக்கணிக்க இந்திய வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர். ஆண்டுக்கு 5 லட்சம் இந்தியர்கள் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்று வந்தனர்.
தற்போது, இந்திய சுற்றுலாப்பயணிகள் துருக்கியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அதே போல, போருக்கு முன்பு துருக்கி நாட்டு ஆப்பிள்களை இந்தியர்கள் விரும்பி சாப்பிட்டு வந்தனர். தற்போது , காஷ்மீர், இமாச்சல் பிரதேஷ் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் ஆப்பிள்களையும், ஈரான் நாட்டில் இருந்து வரும் ஆப்பிள்களையும் சாப்பிட முடிவு செய்துள்ளனர். இதனால், துருக்கி ஆப்பிள்களுக்கு டிமான்ட் வெகுவாக குறைந்து விட்டது. ஆண்டுக்கு துருக்கி 1200 கோடி மதிப்புக்கு இந்தியாவுக்கு ஆப்பிள்களை ஏற்றுமதி செய்தது. தற்போது, இந்திய சந்தையில் இருந்து துருக்கி ஆப்பிள்கள் காணாமல் போய் விட்டது.
அதே போல, ராஜஸ்தான் உதய்பூரில் இருந்து மார்பிள்களை துருக்கி நாட்டுக்கு அனுப்ப வேண்டாமென்று முடிவு செய்துள்ளனர். ஆசியாவிலேயே இங்கிருந்துதான் அதிகளவில் மார்பிள்கள் ஏற்றுமதி ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. துருக்கி உதய்ப்பூரில் இருந்துதான் 70 சதவிகித மார்பிள்களை இறக்குமதி செய்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
இது தொடர்பாக இந்திய மார்பிள் சங்க செயலாளர் கபில் சுரானா கூறுகையில், ‘இந்திய அரசுடன் தொழில்முனைவோர்கள், மக்கள் அனைவருடன் உடன் இருக்கின்றனர் என்பதை துருக்கி நாட்டுக்கு காட்டும் வகையில் உதய்பூரில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து அந்த நாட்டுக்கு மார்பிள் ஏற்றுமதி ஆகாது\ என்று தெரிவித்துள்ளார்.