கடந்த 1947 ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஹைதரபாத்திலுள்ள கராச்சி பேக்கரியின் உரிமையாளரான கான்சாந்த் ராம்னானி பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணத்தில் சிறிய பேக்கரி ஒன்றை நடத்தி வந்தார். சுதத்திரத்துக்கு பிறகு, குடும்பத்துடன் இந்தியா வந்த அவர் ஹைதராபாத்தில் குடியேறினார். இங்கு 1953ம் ஆண்டு சிந்து மாகாணத் தலைநகரான கராச்சி பெயரில் பேக்கரி ஒன்றை தொடங்கினார். மோசாம் ஜோகி பகுதியில் சிறியதாக தொடங்கப்பட்டது இந்த பேக்கரி
1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர்கள் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். கராச்சி பேக்கரியில் இருக்கும் உஸ்மானியா பிஸ்கட்டுகள் ரொம்பவே பிரபலம்.
மக்களிடத்தில் நல்ல செல்வாக்கை பெற்ற கராச்சி பேக்கரி 2007 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் ஆடம்பரமான பஞ்சாரா ஹில்ஸில் தனது இரண்டாவது கிளையை திறந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுடனான மோதலையடுத்து கராச்சி பேக்கரியின் பெயரை மாற்ற வேண்டுமென இந்து அமைப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, கராச்சி பேக்கரியை கான்சாந்த் ராம்னானியின் பேரன்கள் ராஜேஷ், ஹனிஸ் ஆகியோர் நடத்துகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘இந்த பேக்கரி இந்தியாவுக்கு குடி பெயர்ந்த எங்கள் தாத்தா கான்சாந்த் ராம்னாணி என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த பேக்கரி தொடங்கி 73 ஆண்டுகள் ஆகிறது. ஹைதரபாத்தின் அடையாளமாக கராச்சி பேக்கரி இருக்கிறது. எனவே, பெயர் மாற்றம் செய்வதை தடுக்க முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டவர்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் ஒரு இந்தியன் பிராண்ட் பாகிஸ்தான் பிராண்ட் அல்ல என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளனர்.