பல ஆண்டு காலமாக சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், சபரிமலைக்கு ரயில்பாதை அமைப்பது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் கேரள மாநில ரயில்வே அமைச்சர் அப்துல் ரகிமான் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. விரைவில் மத்திய ஆய்வுக்குழுவினர் கேரளா செல்லவுள்ளனர். ஜூலை மாதத்திலேயே நிலம் கையகப்படுத்தப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1997-98 ம் ஆண்டிலேயே அங்கமாலியில் இருந்து எருமேலி வரை 111 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அங்கமாலியில் இருந்து காலடி வரை 7 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் இதுவரை ரயில் பாதை அமைக்கப்பட்டதில்லை. சபரிமலைக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டால், இடுக்கி மாவட்ட மக்கள் ரயில் வசதியை பெறுவார்கள். சபரிமலை பக்தர்களுக்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும். தமிழகத்திலுள்ள போடி நாயக்கனூர்தான் இடுக்கி மாவட்டம் அருகேயுள்ள ரயில் நிலையம் ஆகும்.
சபரிமலைக்கு பிற நகரங்களை இணைக்கும் நேரடி இரயில் பாதை இல்லை, ஆனால் கோயிலுக்கு அருகில் ஒரு சில இரயில் நிலையங்கள் உள்ளன. கோட்டயம், திருவல்லா மற்றும் செங்கன்னூர் ஆகியவை அருகிலுள்ள ரயில் நிலையங்கள் ஆகும், இவை சபரிமலையில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன.
அதே போல, திண்டுக்கல் – சபரிமலை ரயில் பாதை திட்ட ஆய்வுக்காக ரயில்வே நிர்வாகம் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கேரளப் பகுதியில் புலிகள் சரணாலயம், முல்லை பெரியாறு அணை, அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால் 2 கட்டங்களாக இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக திண்டுக்கல்-சபரிமலை ரயில் பாதைத் திட்டம் இருந்து வருகிறது. சபரிமலை பக்தர்கள் மட்டுமல்லாது, இடுக்கி மாவட்ட வர்த்தகர்கள், இருமாநில சுற்றுலா பயணிகளும் இத்திட்டம் மூலம் அதிகளவில் பயன்பெறுவர். இதனால் இத்திட்டம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.