திருப்பதி லட்டுக்கு வயது 308..! லட்டு என்றும் திருப்பதியின் ஹிட்டு..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் “லட்டு” 307 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 308 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் பக்தர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒரு பிரசாதம் “திருப்பதி லட்டு“. அப்படி பிரசாதமாக கொடுக்கப்படும் லட்டுவிற்கு 307 ஆண்டுகளை கடந்து 308 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக தரப்படும் லட்டுவை தயார் செய்வதற்காக 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். அதற்காக ஒரு தனி துறையே செயல்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் எந்த குறையும் இன்றி வழங்க வேண்டும் என்பதற்காக தினமும் 3,50,000 லட்டுகள் தயார் செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொத்தம் மூன்று வகையான லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன.
* பக்தர்களுக்காக கவுண்டரில் விற்பனை செய்யப்படும் 175 கிராம் எடையுள்ள லட்டு,
* 1750 கிராம் எடையுள்ள பெரிய லட்டு,
* புரோக்தம் லட்டு மூன்றாவது இந்த வகை லட்டு மட்டும் சுவாமிக்கு நைவேத்தியம் செய்வதற்காக தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
300 ஆண்டுகளுக்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக பூந்தி கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் பூந்திக்கு பதிலாக பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் யாருமே திருப்பதி லட்டை விற்பனை செய்ய முடியாது என அறிவித்தது. இந்த நடவடிக்கையை இன்று வரை பலரும் பின் பற்றி வருகின்றனர்.
Discussion about this post