ஏழை மாணவர்களின் கனவு..! சாதிய ரீதியான தீண்டாமை..! போராளி ஆம்ஸ்ட்ராங்..!
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக பச்சைத் தமிழகம் கட்சியின் தேசிய அமைப்பாளர் யா.அருள் அவர்களை சந்தித்து பேசினோம்.. அப்போது அவர் நம்மிடம் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…
ஒருநாள் என்னிடம் போன் பண்ணி அண்ணன் சுப. உதயகுமார் அண்ணனை வீட்டிற்கு கூட்டிட்டு வா அருள்மா என்றார். அப்போ நாங்கள் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பை உருவாக்கி தமிழ்நாட்டில் உள்ள எல்லா தலைவர்களையும் சந்தித்து கொண்டிருந்தோம். அப்போது இரவு அவரிடம் பேசி அண்ணா பேராசிரியர் ஜவாஹிருல்லா, தெகலான் பாகவி, சு.ப.உதயகுமார், அப்துல் சமது, பெரியார் சரவணன், நான் உட்பட உங்களை சந்திக்க வருகிறோம் என்றேன்.
உடனே வருகிறேன் அருள்மா என்றார். வந்தவுடன் நாங்கள் வந்த நோக்கம் பற்றி பேசினோம். கேட்டுக்கொண்ட அவர் அரசமைப்பு சட்டம் குறித்து பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார். வந்த தலைவர்கள் எல்லாம் என்ன நமக்கே பாடம் எடுக்கிறார் என்றனர். அப்போது ஒவ்வொரு தலைவர்கள் குறித்தும் அவர் மனதில் உள்ளதை என்னிடம் சொன்னார்.
எத்தனையோ முறை அவரை வீட்டில் சந்தித்து இருக்கேன். ஆனால் என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்றால் அது மட்டுமே. ஏழை, எளிய மக்களின் பிள்ளைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக நானும், அண்ணன் உதயகுமாரும், பச்சைத் தமிழகம் தோழர்களும் முயற்சி மேற்கொண்டோம்.
இது குறித்து பலரை சந்தித்து பேசினோம். அப்போ ஆம்ஸ்ட்ராங் அண்ணனையும் பார்ப்போம் என்று உதயகுமார் அண்ணனிடம் சொன்னேன். சரி வா தம்பி என்றார். தகவலை உடனே போன் செய்து நானும், உதய் அண்ணாவும் வருகிறேன் என்றேன். உடனே வர சொன்னார். சென்ற உடன் அன்போடு வரவேற்று பல விஷயங்களை பேசினார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு :
நாங்கள் இரவு சுமார் 8 மணிக்கு சென்று இருப்போம். அரசமைப்பு சட்டம் குறித்து விரிவாக பேசினார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் பற்றியும் , உதய் அண்ணா அதை வழி நடத்திய விஷயம் குறித்தும் நன்கு அறிந்து இருந்தார். உதய் அண்ணா மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்.
என்னிடம் அருள்மா மக்களுக்கான உண்மையான தலைவர் சுப. உதயகுமார் அண்ணன் என பலமுறை சொல்லி இருக்கிறார். வீட்டின் உள்ளே சென்று பல புத்தகங்களை காட்டினார். சில புத்தகங்களை உதய் அண்ணாக்கு பரிசாக கொடுத்தார். பல விடயங்களை பேசினோம். நேரம் கடந்தது.
நல்ல விருந்தோம்பலை மட்டும் கொடுத்துவிட்டு எங்களை அவர் அனுப்பவில்லை. பாதுகாப்பாக செல்ல வேண்டும் என டிரைவரை கூப்பிட்டு காரை எடுக்க சொல்லி உதயகுமார் அண்ணாவையும், அருள்மாவையும் பத்திரமாக இறக்கிவிட்டு எனக்கு போன் பண்ணி சொல்லு என்றார்.
அந்த அளவுக்கு எங்களின் பாதுகாப்பில் கவனமாக இருந்தார். எங்கள் பாதுகாப்பில் அக்கறை எடுத்த ஆம்ஸ்ட்ராங் அவரின் பாதுகாப்பில் அக்கறை எடுக்காமல் போய் விட்டாரே என யோசிக்க தோன்றுகிறது.
2008ல் சென்னை சட்டக்கல்லூரியில் ஆதிக்க சாதி மாணவர்கள் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மாணவர்களை சாதிய ரீதியான தீண்டாமைகளை நிகழ்த்தி கொண்டே வந்தனர். அதில் சில மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த மாணவர்களை தன் வீட்டில் பல ஆண்டுகள் தங்க வைத்து சட்டம் படிக்க வைத்து, மருத்துவ உதவிகள் செய்து, அவர்களின் வழக்கிற்கு உதவி செய்து தவறான போக நினைத்த மாணவர்களை அண்ணல் அம்பேத்கர் வழியில் செல்ல வைத்த அரசியல் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்.
அவர் வீட்டிற்கு சென்ற போது பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பேசினேன். அவர்கள் சாதி ரீதியாக அங்கு நடந்த ஒடுக்குமுறைகளை சொன்ன போது கோபம் வந்தது. இப்படி எனக்கு தெரிந்து சட்டம்னா என்ன..? என்று தெரியாத முதல் தலைமுறை பட்டதாரிகளை நீதிமன்றம் வாசலில் கொண்டு போய் நிறுத்திய மாமனிதர் அவர்.
வெளிச்சம் செரின் தொழில் பயிற்சி :
பல ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெற காரணமாக இருந்தவர். கிராமபுறத்தில் இருந்து வறுமையின் காரணமாக படிப்பை கைவிட்ட பலருக்கு “வெளிச்சம்” செரின் மூலம் தொழில் பயிற்சியை கொடுத்து, அவர்கள் தங்க விடுதி ஏற்பாடு செய்து , ஆட்டோ உள்ளிட்ட தொழிலை உருவாக்கி கொடுத்தார்.
அடவு கலைக்குழுவை உருவாக்கிய மறைந்த பாதர் ஜான் சுரேஷ் மற்றும் நந்தினி அக்கா மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் ஐ.ஏ.எஸ் பயிற்சி பெற பெருங்குடியில் வாசிப்புடன் கூடிய நூலகத்திற்கு உதவி செய்து, தொடர்ந்து ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.
மறைந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங் பற்றிய பல்வேறு பதிவுகளை பற்றி நம்மிடம் பகிர்ந்துள்ளார்.. அதனை பற்றி நாளைய தொகுப்பிலும் படிக்கலாம்..
மக்களின் போராளி ஆம்ஸ்ட்ராங்..! யார் இவர்..? மக்களுக்காக இவர் செய்தது..?
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..