மக்களின் போராளி ஆம்ஸ்ட்ராங்..! யார் இவர்..? மக்களுக்காக இவர் செய்தது..?
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக பச்சைத் தமிழகம் கட்சியின் தேசிய அமைப்பாளர் யா.அருள் அவர்களை சந்தித்து பேசினோம்.. அப்போது அவர் நம்மிடம் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீங்கள் ஏன் குரல் கொடுக்கிறீர்கள்..? அவரின் பின்னணி தெரியுமா..? என சில ஊடக நண்பர்களும் , தோழர்களும் கேட்டார்கள். அவர்களுக்கு நான் அவரை பற்றி நன்கு அறிந்ததால் தான் குரல் கொடுக்கிறேன் என சொன்னேன்.
எப்போதும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருப்பது தான் அறம். அது தான் ஒரு மனிதரின் பணி. தனிப்பட்ட முறையில் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும்.
அதிலும் குறிப்பாக அவர் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த போது தூய்மை பணியாளர்களை ஒப்பந்த பணியாளர்களாக பணியமர்த்தி சரியான சம்பளம் கொடுக்காமல் தனியாருக்கு தாரை வார்த்த அரசை எதிர்த்து குரல் கொடுத்தவர்.
அப்போது போராட்டம் நடத்தப்பட்டது. தூய்மை பணியாளர் மத்தியில் பணி செய்தோம். வலுவான சங்கம் இருந்ததால் மறைந்த தூய்மை பணியாளர் முனியம்மா தலைமையில் போராட்டம் நடத்தினோம்.
சென்னை நகரை விட்டு வெளியேற்றம் :
நானும் சில ஆலோசனைகளை சொல்வேன். அதை கேட்டு குறிப்பெடுத்து கொள்வார். பல பிரச்சனைகளை அப்படி பேசி இருக்கிறோம். சென்னை நகரை விட்டு அப்புறப்படுத்திய போது எந்த கட்சி தலைவர்களும் வலுவான போராட்டத்தையோ, குரலையோ முன்னெடுக்காத போது இவரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
மறைந்த சக்திதாசன் அய்யா தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களையும் ஒருங்கிணைத்து 2006ம் ஆண்டு புரசைவாக்கத்தில் உழைக்கும் மக்கள் மாமன்றத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பட்டியலின தலைவர்களும், முற்போக்கு தலைவர்களும் கலந்து கொண்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை அனுப்பி அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சொன்னார்.
மண்ணின் பூர்வ குடிகளை சென்னை நகரை விட்டு தொடர்ந்து துரத்தும் நவீன தீண்டாமையை இரண்டு கட்சிகள் தொடர்ந்து செய்து வருகிறது அதற்கு எதிராக சட்டப்போராட்டமும், களப்போராட்டத்திலும் மறைந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பங்கு ரொம்ப முக்கியமானது.
மக்கள் பிரச்சினைகளை அவர் கவுன்சிலராக இருந்த போது எதற்கும் அஞ்சாமல் மிக துணிச்சலாக பேசியவர். சென்னை அல்லிகுளம் மோர் மார்கெட் விஷயத்தில் அங்கு வியாபாரம் செய்யும் சிறுகடை வியாபாரிகளை அப்புறப்படுத்த காவல்துறை தொடர்ந்து நெருக்கடிகள் கொடுத்தன. அப்போது பெண்ணுரிமை இயக்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன் நின்றார். அவரும் சட்ட ரீதியாக சில பணிகளை செய்தார்.
ஒரு நாள் கடலூரில் இருளர் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ரோட்டில் மறியல் செய்து கொண்டிருந்தார்கள். அவரோடு நானும் களத்தில் இருந்தேன். என்னோடு அடிக்கடி போனில் பேசி , என் உடல் நலம் குறித்தும் , என் மக்கள் பணி குறித்தும் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தமையால் அன்றைய தினம் எதார்த்தமாக போன் செய்து எங்க இருக்கமா என்றார்.
அண்ணா பழங்குடியின போராட்டம் என்றேன். உடனே கோரிக்கைகளை கேட்ட அவர் அந்த மாவட்ட கட்சி தலைவர், வழக்கறிஞர்களிடம் பேசி பழங்குடியின மக்களுக்கு உதவிகள் செய்ய உத்தரவிட்டார்.
நான் பலமுறை அவரது பெரம்பூர் வீட்டிற்கு சென்றுள்ளேன். எப்போ போனாலும் அரசமைப்பு சட்டத்தின் உள்ள முக்கிய விஷயங்களையும், அதற்கு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய தீர்வுகளையும் சுட்டிக்காட்டி பேசுவார். அரசமைப்பு சட்டத்தை முழுமையாக உள்வாங்கி அதை கரைத்து குடித்து, ஸ்கெட்ச் வைத்து மார்க் செய்து ஒவ்வொரு விஷயத்தையும் புரியும் படி விளக்கி சொல்வார்.
இன்னொரு நாள் தமிழ்நாடு பழங்குடி வாகிரிவேல் நரிக்குறவ தொழிலாளர் சங்கம் மூலம் அந்த மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரிக்கை மனு கொடுத்தோம். அப்போது பொறுமையாக உட்கார்ந்து மனுவை படித்தார். உடனே அவரது கட்சியின் முன்னாள் எம்.பி அம்பேத்ராஜன், சுரேஷ்மானே மூலம் பேச நடவடிக்கை எடுத்தார்.
பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நரிக்குறவ தலைவர்களிடம் எப்படி வந்தீர்கள்..? எங்கு தங்கி உள்ளீர்கள்..? சாப்பிட்டீர்களா..? என கேட்டு 35,000 ரூபாய் பணத்தை கவரில் போட்டு அந்த தலைவர்களிடம் கொடுத்து உங்கள் உரிமை போராட்டத்தை வீரியமாக நடத்துங்கள்.
நான் எப்போதும் உங்கள் கூடவே இருப்பேன் என்றார். அந்த மக்களுக்கு முகத்தில் அவ்வளவு சந்தோஷம். நம்மையும் ஒரு மனுஷன் மதிச்சு உட்கார வைத்து பேசுகிறாரே என்று எனக்கு நன்றி சொன்னார்கள்.
ஒரு தடவை மரக்காணம் உப்பளத் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக மோகன் என்பவர் என்னிடம் உதவி கேட்டார். நான் உடனே ஆம்ஸ்ட்ராங் அண்ணனை தொடர்பு கொண்டு உங்களை சந்திக்க வேண்டும் என்றேன். வா அருள்மா என்றார். வீட்டுக்கு போனோம். உட்கார வைத்து அவருக்கு அரசமைப்பு சட்டம் கொடுத்து இருக்கும் உரிமைகள் பற்றி பாடம் எடுத்தார்.
ஒவ்வொரு முறை அவர் வீட்டுக்கு போனா இன்னைக்கு நள்ளிரவு தான் என முடிவு செய்து விடுவேன். அன்றைய தினமும் அப்படித்தான் நடந்தது. பிரச்சினைகளை உள்வாங்கிய சமத்துவ தலைவர் உடனே அவரிடம் ரூ 35,000த்தை கையில் கொடுத்து உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என்றார். வந்த அவருக்கு ஒன்னுமே புரியல. அருள் சொன்னா உடனே உதவுகிறார் என்றார்.
மறைந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங் பற்றிய பல்வேறு பதிவுகளை பற்றி நம்மிடம் பகிர்ந்துள்ளார்.. அதனை பற்றி நாளைய தொகுப்பிலும் படிக்கலாம்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..