திருநெல்வேலி ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை..!
திருநெல்வேலியில் மிகவும் பிரபலமான பண்டமாக பனை ஓலை கொழுக்கட்டை அமைகிறது. இந்த பகுதிகளில் பனை மரங்கள் அதிகம் இருப்பதால் அங்கு கிடைக்கும் பனை வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றை கொண்டு இந்த பண்டம் செய்யப்படுகிறது.
இந்த பனை ஓலை கொழுக்கட்டை செய்து இறைவனுக்கு படைக்கப்படுகிறது. இதற்கு பனை ஓலை இருந்தால் மட்டும் போதும் ஈசியாக இதை செய்யலாம், வாங்க எப்படினு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – அரை கிலோ
பனை வெல்லம் அல்லது கருப்பட்டி – 1 கிலோ
சுக்குப் பொடி – சிறிதளவு
தேங்காய் – 1
பனை ஓலை – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சரிசியை நீரில் நன்றாக கழுவி நிழலில் உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ள வேண்டும்.
ஓலையின் மடிப்பான பகுதியை ஒரு அடி நீளத்திற்கு வெட்டிக் கொள்ள வேண்டும். பின் இரண்டு முனைகளையும் சிறிது நறுக்கிக் கொள்ள வேண்டும்.
தேவையற்ற பனை ஓலைகளில் இருந்து நார் கிழித்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பனை வெல்லம் அல்லது கருப்பட்டியில் டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் பச்சரிசி மாவு, சுக்குப்பொடி, தேங்காய் துருவல் ஆகியவை சேர்த்து கலந்துக் கொண்டு பின் காய்ச்சிய பாகு சேர்த்து நன்றாக கலந்து கட்டிகள் இல்லாமல் பிசைந்துக் கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் தேவையற்ற ஓலைகளை போடவும்.
வெட்டிய ஓலையின் மடிப்பான பகுதியில் சிறிது மாவினை வைத்து மற்றொரு ஓலையை கொண்டு மூடவும். பின் மற்றொரு ஓலையை வைத்து மாவு வெளியில் வராதவாறு நார் கொண்டு கட்டி விடவும்.
இதைபோலவே மற்ற மாவுகளையும் ஓலையை பயன்படுத்தி தயாரித்துக் கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் தயாரித்த ஓலைகளை வைத்து மூடி போட்டு 25 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும்.
25 நிமிடங்களுக்கு வேகவைத்த பின்னர் அவ்வளவுதான் பனை ஓலை கொழுக்கட்டை தயார்.
