தண்ணீர் இல்லை என கர்நாடக அரசு பொய் கூறுவதாக அமைச்சர் துரை முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக ஒன்றிய அமைச்சரிடம் புகார் அளிக்க, இன்று காலை சென்னை விமானநிலையத்தில் இருந்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு விமானத்தில் புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
முன்னதாக, அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழ்நாட்டுக்கு உடனடியாக 5000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியும், இதுவரை ஒரு சொட்டு நீர்கூட கர்நாடக அரசு திறந்து விடவில்லை. இந்த காவிரி நதிநீர் ஆணையத்தை உச்சநீதிமன்ற உத்தரவின்படிதான் ஒன்றிய அரசு அமைத்தது.
தற்போது இப்பிரச்னை குறித்து ஒன்றிய அரசிடம் முறையிட, இன்று தமிழகத்தில் அனைத்து கட்சி எம்பிக்களின் குழு புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்று, அங்கு இன்று மாலை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துகிறோம். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரங்களில் ஒவ்வொன்றுக்கும் கர்நாடக மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தின் மூலம் கர்நாடக அரசிடம் இருந்து தமிழ்நாடு காவிரி நீரை பெற்று வருகிறது. இது நியாயமல்ல என்பது என் கருத்து.
தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீரை கர்நாடக அரசு நியாயமாக திறந்துவிடும்வரை, நாங்கள் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். கடந்த 20 ஆண்டுகளாக இதேபோல்தான் நடந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்துக்கு காவிரி நதிநீர் ஆணையம் நேரில் ஆய்வு செய்து, தண்ணீரை திறந்து விடும்படி கூறி வருகிறது. இதனால் கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை, வறட்சிதான் நிலவுகிறது என அம்மாநில அரசு பொய்யான காரணங்களை கூறி வருகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.