மீன் புட்டு சாப்பிட்டு இருக்கீங்களா..?
மீன் நம்முடைய ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள உதவியாகவும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யவும் பயன்படுகிறது. இதயத்துடிப்பை சீராக செயல்பட உதவியாக இருக்கிறது.
மேலும் உடல் எலும்புகளுக்கும் வலுவளிக்கிறது. இப்படி குறிப்பிட்டுள்ள முறையில் மீன் புட்டு செய்து சாப்பிட்டு பாருங்க ரொம்ப சுவையாக இருக்கும், இன்னும் கொடுங்க என்று கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
தேவையான பொருட்கள்:
- எட்டு பீஸ் மீன்
- உப்பு
- மஞ்சள் தூள்
- எண்ணெய்
- கடுகு
- இரண்டு பெரிய வெங்காயம்
- இரண்டு பல் பூண்டு
- இரண்டு பச்சை மிளகாய்
- ஒரு துண்டு இஞ்சி
- அரை டீஸ்பூன் மல்லித்தூள்
- கறிவேப்பிலை
- அரை டீஸ்பூன் சீரகத்தூள்
- ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- கொத்தமல்லி இலை
- கால் டீஸ்பூன் மிளகுத்தூள்
- உப்பு தேவையானது
செய்முறை:
மீன் புட்டு செய்வதற்கு அதிகமான முள் இல்லாத மீன் சிறந்ததாக இருக்கும். அதற்கேற்றார்போல மீனை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பின் பாத்திரத்தில் மீன் போட்டு அது மூடும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 5 நிமிடங்களுக்கு வேக வைத்து பின் ஒரு தட்டிற்கு மாற்றவும்.
பின் மீனை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து முள் இல்லாமல் பிச்சு போட வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து அதனை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
பிறகு மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் கலந்து விட வேண்டும். பின் இதில் பிச்சு வைத்த மீனை சேர்த்து கிளறி விட வேண்டும்.
கடைசியாக கொத்தமல்லி இலை, மிளகுத்தூள் சேர்த்து கிளறி விட்டு இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான மீன் புட்டு தயார்.