ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 4வது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில், இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன.
தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. நேற்று மாலை 6 மணிக்கு நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை மலேசியா வீழ்த்தியது. இரவு 8.30 மணிக்கு நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் ஜப்பானை ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது. இதனையடுத்து இறுதி போட்டியில் இந்திய அணியும், மலேசிய அணியும் மோதியது.
இப்போட்டியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதையடுத்து இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இதன்மூலம் ஆசிய ஹாக்கி தொடரில் 4 முறை சாம்பியன் பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.