ஃபார்முலா 4 கார் ரேஸ்… வெற்றி பெற்றவர்கள் யார் யார்..?
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது.
தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா 4 சாலை பந்தயம் 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்ற இப்போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் F4 இந்தியன் ரேஸ் (JK FL GP 4 ), இந்தியன் ரேசிங் லீக் (Indian racing league) மற்றும் ஜேகே எஃப்எல் ஜிபி 4(Formula 4 Indian Race) என மூன்று வகை போட்டிகள் நடைபெற்றது.
இதில் F4 இந்தியன் ரேஸின் டில்ஜித் என்பவர் முதலிடம் பிடித்தார். இந்தியன் ரேசிங் லீக் முதல் சுற்றில் கோவாவை சேர்ந்த ஹய்முன் என்பவரும் இரண்டாம் சுற்றில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ஆல்வெரோ என்பவர் முதல் இடத்தை பிடித்தனர்.
அதேபோல் ஃபார்முலா 4 இந்தியன் ரேஸில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கொச்சி வீரர் பார்டர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.