வத்தக்குழம்பு இன்னிக்கு செய்யலாமா..?
தேவையான பொருட்கள்:
புளி – ஒரு கைப்பிடி அளவு
சின்ன வெங்கயம் – 10
பூண்டு – 10
சுண்டைக்காய் வத்தல் – ஒரு கைப்பிடி அளவு
மணத்தக்காளி வத்தல் – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – சிறிது
கடுகு – சிறிதளவு
உளுந்தம் பருப்பு – சிறிது
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
மல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
வெந்தயம் – 10 எண்ணம்
செய்முறை:
ஒரு வாணலை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு, இரண்டு ஸ்பூன் மல்லி விதை, ஒரு ஸ்பூன் மிளகு, ஓஉ ஸ்பூன் சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆறு, கறிவேப்பிலை சிறிது சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
வறுத்த அனைத்தையும் நன்றாக ஆறவைத்து அத்துடன் சின்ன வெங்காயம் நான்கு சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு கைப்பிடி சுண்டைக்காய் வத்தல் மற்றும் ஒரு கைப்பிடி மணத்தக்காளி வத்தல் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து தனியாக வைக்கவும்.
அதே வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
ஊறவைத்த புளியை கரைத்து வடிகட்டி உப்பு கலந்து அதனை வதக்கிய வெங்காயத்துடன் கலந்து விட வேண்டும்.
பின் சிறிது மஞ்சள்தூள், அரைத்த மசாலா விழுது சேர்த்து கலந்து தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
குழம்பு கொதிக்கும்போது வறுத்த சுண்டைக்காய் வத்தல் மற்றும் மணத்தக்காளி வத்தலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு நன்றாக சுண்டி வந்ததும் அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான வத்தகுழம்பு தயார்.