“ஒடுக்கப்பட்ட மக்களின் வழக்குகளும், மறுக்கப்படும் நீதியும்..” போராளி ஆம்ஸ்ட்ராங்..!
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக பச்சைத் தமிழகம் கட்சியின் தேசிய அமைப்பாளர் யா.அருள் அவர்களை சந்தித்து பேசினோம்.. அப்போது அவர் நம்மிடம் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…
பவுத்த கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல புத்தர் கோயில் ஒன்றை கட்டி வருடம் தோறும் விழா எடுத்து , வாரம் இருமுறை இலவசமாக உணவு வழங்கினர். பெரம்பூர் பகுதி முழுவதும் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள வீட்டின் நல்ல, துக்க நிகழ்வுகளில் தன் குடும்பத்தில் ஒருவர் போல உணர்ந்து பங்கு கொள்வார்.
அதனால் அந்த பகுதி முழுவதும் மக்களிடம் செல்வாக்கு பெற்று இருந்தார். மக்களும் என்ன பிரச்சனையாக இருந்தாலும் இவரிடம் அணுகுவார்கள். சுமூகமாக பேசி குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்ட பலவற்றை தீர்த்து வைத்து இருக்கிறார்.
வட சென்னையில் திசைமாறி சென்ற பல இளைஞர்களை புத்த, அம்பேத்கர் , பெரியாரிய கொள்கைகளை விதைத்து, அவர்களை நல்ல தலைவர்களாக உருவாக்கியதில் இவருக்கு பெரும் பங்கு உள்ளது. கானா பாலா, நடிகர் தீனா, இசைவாணி உள்ளிட்ட பல கானா பாடகர்களை உருவாக்கி அண்ணலின் புகழை பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சென்றார்.
எழுத்தாளர் இளவேனில் மூலம் திராவிட இயக்கங்கள் தலித் தலைவர் சத்தியவாணி முத்துவை இருட்டடிப்பு செய்த விஷயத்தை புத்தகம் மூலம் உண்மை வரலாற்றை பதிவு செய்தார்.
மீனம்பாள் சிவராஜ், ரெட்டைமலை சீனிவாசன், அயோத்தி தாசர் பண்டிதர் போன்ற ஆளுமைகளின் வரலாற்றை ‘தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளை’ என்ற பதிப்பகம் உருவாக்கி அதன் மூலம் வெளியிட்டார். சென்னை புத்தக கண்காட்சியில் அரங்குகள் எடுத்து அதை எளிய மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
ஆம்ஸ்ட்ராங் மூலம் சட்டம் படித்த வழக்கறிஞர்கள் பல்லாயிரக்கணக்கானோர். பார் கவுன்சிலர் தலைவர் பதவியில் உள்ள அமலராஜ் உள்ளிட்ட பலர் வெற்றி பெற இவர் உருவாக்கிய வழக்கறிஞர்களும் ஒரு காரணம். கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை எதிர்த்து ஒருமுறை போட்டியிட்டவர்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் உரிமைகளை பெற OBC தொழிற்சங்கத்தை டாக்டர். அப்சல் மூலம் உருவாக்கி அதற்கு ஆலோசகராக இருந்தார். உதவிக்காக வருகிற இஸ்லாமிய மக்கள் உள்ளிட்ட பிற சமூக மக்களுக்கும் உதவி செய்து “சமத்துவ தலைவர்” என பகுஜன் தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
நான் எழுதிய “ஒடுக்கப்பட்ட மக்களின் வழக்குகளும், மறுக்கப்படும் நீதியும்” புத்தகம் மீது தீராத காதல் கொண்டு, வன்கொடுமை வழக்குகள், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என உணர்ந்து 1000 புத்தகங்களை வாங்கி அதை கட்சியில் உள்ள வழக்கறிஞர்களிடம் கொடுத்து படிக்க சொன்னவர்.
அந்த புத்தகத்தில் சந்தேகம் வந்தால் உடனே கால் செய்து கேட்டு தெளிவு பெற்றுக்கொள்வார். அந்த புத்தகம் வெளி வர உதவினார். புத்தகம் விற்று தீர்ந்த பின் மீண்டும் அந்த புத்தகத்தை மறு பதிவு செய் அருள்மா என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
பகுஜன் தொண்டர்களை அறிவார்ந்த ரீதியில் கொண்டு செல்ல தொடர்ந்து பயிற்சி வகுப்புகளை எடுத்தார். எத்தனையோ பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர், சேர்மன் பதவியில் ஒடுக்கப்பட்ட மக்கள் அமர இவரின் பங்கும், பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு உழைப்பும் அதிகம். கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒடுக்கப்பட்ட தலைவர்கள் புகைப்படங்கள், வசனங்கள் தாண்டி முற்போக்கு ஆளுமைகளின் படங்களும், வார்த்தைகளும் இருக்கும்.
பெண் கல்வி தான் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என நினைத்த ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பல பெண் குழந்தைகளின் கல்விக்கு பணத்தை வாரி இறைத்தார். சாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகரானர் நினைவு நாளில் ஒவ்வொரு வருடமும் போஸ்டர் ஒட்ட ஏற்பாடு செய்வதோடு அவரின் கருத்துக்களை கொண்டு சேர்த்தார்.
தமிழ்நாட்டில் எங்கு சாதி ஆணவ கொலைகளோ , தீண்டாமை கொடுமைகளோ , படுகொலைகளோ நடந்தால் அங்கு உடனே சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லி , உதவிகள் செய்து , மக்களுடன் நின்று போராடி , நீதிமன்றம் மூலம் நீதியை பெற்றுத்தந்த அரசியல் ஆளுமை இவர். இளவரசன் , கோகுல்ராஜ் , சங்கர் இப்படி பலரின் நீதிக்கு பக்கபலமாக நின்றவர்.
SC /ST வன்கொடுமை தடுப்பு சட்டம் :
ஒருமுறை இறந்த தாழ்த்தப்பட்டவரை பொது கல்லறையில் புதைக்க கூடாது என சொல்லி விட்டனர். அந்த இடத்திற்கு சென்று களத்தில் இறங்கி தன் கையால் பாடியை தூக்கி , தோளில் சுமந்து மிக துணிச்சலாக ஆதிக்க சாதியினர் பகுதியில் நடந்து புதைக்கும் உரிமையை பெற்றார். காவல்துறையினர் இவரின் செயலைக் கண்டு பயந்தனர்.
2018ல் சென்னையில் SC /ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகும் வகையில் பிஜேபி அரசு சட்டம் கொண்டு வந்த போது அதற்கு எதிராக அரசே அஞ்சும் அளவுக்கு கிண்டி கவர்னர் மாளிகை நோக்கி அனைத்து பட்டியலின தலைவர்களை ஒருங்கிணைத்து பிரம்மாண்டமான பேரணி நடத்தப்பட்டது. அதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அந்த பேரணியை ஒருங்கிணைப்பு செய்தவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்.
மறைந்த மண்ணுரிமை போராளி ஜான் தாமஸ் அவர்களின் மனைவி மார்க்ரெட் என்னிடம் அவரின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க உதவிகள் கேட்டு வந்த போது பல பட்டியலின தலைவர்களிடம் நிதி கேட்டு சென்றேன். அப்போது ஆம்ஸ்ட்ராங் அவர்களிடம் சென்ற போது உடனே பஞ்சமி நிலப்போராட்டங்கள் குறித்தும், அதில் ஜான் தாமஸ் பங்கு குறித்தும் கேட்டார். அவரின் குடும்பம் படும் கஷ்டங்களை கேட்டு அறிந்தார். தன்னால் ஆன நிதியை கொடுத்து உதவினார்.
ஒவ்வொரு முறையும் என்னை பார்க்கும்போது உதய் அண்ணாவும் , நீயும் சொன்ன நூலகம் , ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு திட்டம் என்னாச்சு அருள்மா? என்று கேட்பார். நீங்கள் துவங்குங்கள் அதற்கு நான் உதவி செய்கிறேன் என்று சொல்லி விட்டேனே பின்பு ஏன் தயங்குகிறீர்கள்? என்று அடிக்கடி கேட்பார்.
உதய் அண்ணா எப்போது சென்னை வருவார்..? அவர் வந்தால் என்னை பார்க்க கூட்டிட்டு வா அருள்மா இது குறித்து பேசுவோம் என்றார். கடைசி வரையில் அவரின் ஆசை திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது.
இராஜராஜ சோழன் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் பேசிய பேச்சு தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலர் ரஞ்சித்தை விமர்சித்தார்கள். சிலர் மிரட்டினார்கள். அப்போது ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களை அனுப்பி , மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கை எதிர் கொள்ள உதவினார்.
அந்த வழக்கு ரத்து செய்ய இவரின் பங்கும் , உதவியும் முக்கியமானது. ரஞ்சித்துக்கு பக்க பலமாக இருந்தவர். பதிலுக்கு ரஞ்சித்தும் ஆம்ஸ்ட்ராங் அவர்களை மிகவும் நேசித்தார். ஒருமுறை பேசும் போது என்னிடம் சினிமாவில் ஒடுக்கப்பட்ட கலைஞர்கள் , இயக்குநர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை சொன்னார். அந்த வகையில் ரஞ்சித் எடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக நிற்கிறேன் என்றார்.
மறைந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங் பற்றிய பல்வேறு பதிவுகளை பற்றி நம்மிடம் பகிர்ந்துள்ளார்.. அதனை பற்றி நாளைய தொகுப்பிலும் படிக்கலாம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..