விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள நிலையில் பிசிசிஐ சார்பில் விராட் கோலிக்கு சிறப்பு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை (மார்ச் 4) தொடங்கவுள்ளது. இந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது போட்டியாகும்.
இதன்மூலம் 145 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 71-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் விராட். இந்திய அளவில் இந்த மைல்கல்லை மட்டும் 12வது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிசிசிஐ சார்பில் விராட் கோலிக்கு சிறப்பு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கங்குலி, சேவாக் உள்ளிட்டோர் விராட் கோலிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அந்த வீடியோவில் பேசிய கங்குலி, ”விராட் கோலி 10, 11 ஆண்டுகளுக்கு முன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஜூனியர் கிரிக்கெட்டிலிருந்து தொடங்கி இன்று பெரும் சாதனையை படைக்க உள்ளார். அவரது பயணம் மகத்தானது. பிசிசிஐ சார்பாகவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் என்கிற முறையிலும் அவரை பாராட்டுகிறேன்” என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து வீடியோவில் பேசிய சச்சின், ”ஆஸ்திரேலிய தொடரில் விளையாடியபோது தான் விராட் கோலி குறித்து முதலில் கேள்விப்பட்டேன். அனைவரும் அப்போது விராட் கோலி பற்றியே பேசினர். 100வது டெஸ்ட்க்கு வாழ்த்துகள். இளைஞர்களின் ரோல் மாடல் நீங்கள். உங்களை பார்த்து பலர் கிரிக்கெட் விளையாட வந்துள்ளனர். அதுவே உங்களின் பெரிய சாதனை” என பாராட்டியுள்ளார்.