பிஜேபி கையில் கூலிப்படையா..? ஆம்ஸ்ட்ராங் படுகொலை பின்னணி..!
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக பச்சைத் தமிழகம் கட்சியின் தேசிய அமைப்பாளர் யா.அருள் அவர்களை சந்தித்து பேசினோம்.. அப்போது அவர் நம்மிடம் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…
அவரின் படுகொலைக்கு 5 நாட்களுக்கு முன் தொலைபேசியில் அழைத்து அருள்மா எனக்கு ஓர் உதவி செய்வாயா என்றார்? என்ன அண்ணா சொல்லுங்கள் என்றேன். மகாலட்சுமி என்ற மாணவிக்கு லயோலா கல்லூரியில் சமூகப்பணித்துறையில் படிக்க ஒரு சீட் வேண்டும் என்றார். உதவியாளர் செல்வம் உடன் அனுப்புகிறேன் நீயும் கூட போ என்றார்.
எத்தனையோ பேருக்கு அவர் உதவி செய்து இருக்கிறார். அவர் உதவி கேட்கும் போது செய்ய வேண்டும் என்ற ஆசையில் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு 2 நாட்கள் கல்லூரிக்கு அலைந்து கல்லூரி முதல்வரிடம்பேசி அந்த சீட்டை வாங்கி கொடுத்தேன்.
உடனே இந்த தகவலை அந்த மாணவி , செல்வம் சொல்ல என்னை போனில் அழைத்து ரொம்ப நன்றி அருள்மா என்றார். அது தான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை. அடுத்த நாள் அவரை சந்திக்கலாம் இருந்தேன். தொடர் பணிகள். அதற்க்குள் அவரை கொலை செய்து விட்டார்கள். கடைசியில் அவரை சந்திக்க முடியாமல் போனது.
தமிழ்நாட்டில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சி சந்தித்து வந்தது. பலமுறை அவரிடம் ஏன் அண்ணா எவரிடமும் கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திக்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறேன். அதற்கு அவர் சொன்ன பதில் அருள்மா பட்டியலின வாக்குகள் மட்டுமே திராவிட கட்சிகளின் குறி. அந்த மக்களின் பொருளாதாரத்தை அலசி பாரு.
வாழ்வாதாரத்தை எடுத்துக் கொண்டால் இன்னும் குடிசைகளிலும் , பிளாட் பாரத்திலும் வாழ்கின்றனர். 60 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்து என்ன பயன் என்றார்? 44 தனித்தொகுதி எம்.எல்.ஏக்கள் இருந்தும் என்ன பயன்..? அவர்கள் கட்சி சொல்வதை கேட்டு அடிமைகளாக உள்ளனர். சமூக நீதி பேசும் திராவி கட்சிகளில் எத்தனை பேர் பட்டியலின நபர்கள் மாவட்ட , மாநில செயலாளர்களாக உள்ளனர்..? என்ற கேள்வியை வைத்தார்.
அண்ணல் எழுதிய “மதங்களை விட தேசமே முக்கியம் ” உட்பட 8 புத்தகங்களை என்னிடம் கொடுத்தார். அதை அய்யாவிடம் காண்பித்தேன். அவருக்கு எல்லா புத்தகங்களும் பிடித்து போகவே எடுத்துக்கொண்டார். இந்த தகவலை ஆம்ஸ்ட்ராங் அவர்களிடம் சொன்னேன். ரொம்பவே சந்தோசப்பட்டார். சீக்கிரம் வந்து அய்யாவை பார்த்து விடுங்கள் அண்ணா என்றேன். நிச்சயமாக அருள்மா என்று சொன்ன அவர் கடைசி வரை அய்யாவை சந்திக்காமலே போய் விட்டார்.
அவரின் இறுதி அஞ்சலி நிகவில் மப்டி உடையில் எண்ணற்ற காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அரசு துறை அதிகாரிகள் , நீதிமன்ற அலுவலர்கள் , அரசியல்வாதிகள் , பொது மக்கள் , வழக்கறிஞர்கள் இப்படி இலட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள என்ன காரணம்? அவரின் பண்பும் , மனசும் , அவர் செய்த மக்கள் பணிகள் தான் மக்களை கூடச் செய்தது.
பொதுப்புத்தி , திராவிட ஆட்சியாளர்கள் அவரை ரவுடி என முத்திரை குத்தி ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்க விஷம பிரச்சாரங்களை பரப்பி விடுகின்றனர். உங்கள் பார்வையில் அவர் ரவுடி என்றால் எங்கள் பார்வையில் அவர் “பண்பாட்டு தலைவர்”. உங்கள் மண்டையில் ரவுடி என்றால் அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏன் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள வேண்டும்..?
தமிழ்நாட்டில் எந்த தலைவருக்கும் 8 மணி நேரம் கடந்து, வழி நெடுகிலும் இளைஞர்கள் , குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் இப்படி அஞ்சலி செலுத்தவில்லை. ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த தலைவருக்கு இவ்வளவு மக்கள் அஞ்சலி செலுத்துவதை உங்களின் மட்டடமான புத்தி ஏற்றுக் கொள்ளவில்லை. இதுவும் ஒரு சாதிவெறி மனநிலை தான்.
ரவுடி பிம்பத்தை கட்டமைத்து அவருக்கு கூடிய மக்கள் கூட்டத்தை திசை மாற்ற ஆளும் கட்சியும், ஆதிக்க சாதி கும்பலும் முயற்சிக்கிறது. சென்னை மாநகர முன்னாள் கமிஷனர் ரத்தோர் அவர் மீது 7 வழக்குகள் இருந்தனர். அவர் சட்டப்படி நீதிமன்றம் சென்று நிரபராதி என தீர்ப்பை பெற்று விட்டார். என சொன்ன பின்பும் உங்கள் வாய்கள் விஷ பாம்பு போல நஞ்சை கக்குவது ஏன்..?
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து திராவி கட்சிகளை இந்த அளவுக்கு எதிர்த்த ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இல்லை. அதுவும் ஸ்டாலின் தொகுதியில் இருந்து கொண்டு முதல்வரின் செயல்பாடுகளை எதிர்த்து அரசியல் செய்வது தான் ஆட்சியாளர்களுக்கு அவரை பிடிக்கவில்லை. அரசும், காவல்துறையும் நினைத்து இருந்தால் அவர் உயிரை காப்பாற்றி இருக்கும். அவருக்கு பாதுகாப்பு கொடுத்து இருக்கும்.
அரசும் , காவல்துறையும் அவரின் உயிர் போக உடந்தையாக இருந்து இருக்கு. கூலிப்படையின் இந்த கோழைத்தனமாக கொலை வெறி தாக்குதலை காவல்துறை தடுக்க தவறவிட்டது ஏன் ? என முதல்வர் தன் இதயத்தை தொட்டு உண்மையோடு பதில் பேசுவாரா?? வட சென்னை மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மக்களின் அநீதிக்கு எதிராக , அதிலும் திராவிட கட்சிகளின் பட்டியலின துரோகத்தை தொடர்ந்து அம்பலப்படுத்திய சமத்துவ தலைவரை காலி செய்வது தான் அதற்கு முற்றுப்புள்ளி என ஆட்சியாளர்களும் , காவல்துறையும் , பாசிச கும்பலும் முடிவு எடுத்து விட்டது போல.
கூலிப்படையின் கையில் இந்த அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டு அதன் பின்னணியில் பிஜேபி உள்ளதோ..? அதை காவல்துறை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதோ என சந்தேகிக்க தோன்றுகிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொடூர கொலை பின்னணியில் இதை செய்ய ஏவியவர்கள் யார்..? செய்தவர்கள் யார்..? என காவல்துறையும் , அரசும் கண்டு பிடிக்காமல் சரண் அடைந்தவர்கள் தான் இந்த கொலையின் குற்றவாளிகள் என எதன் அடிப்படையில் முடிவுக்கு வந்தார்கள் என தெரியவில்லை?
ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலையில் பிஜேபி கும்பலோ, என உயர்நீதிமன்றம் நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை மேற்கொண்டு , தொடர்ந்து கண்காணித்து வந்தால் பல உண்மைகள் வெளிவரும். அதை இந்த திமுக அரசு செய்ய விடுமா? என்பது சந்தேகம் தான். பெயருக்கு சிலரை கைது செய்துவிட்டு சிறையில் தள்ளி வழக்கை முடிக்கலாம். ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் காவல்துறை என்னென்ன கெடுபிடிகளை செய்தது என்பதை அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன். அவர் பற்றி சொல்ல இன்னும் ஆயிரம் இருக்கு.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு குரல் :
இவரின் கொலையின் இறுதியில் பட்டியலின மற்றும் மற்ற கட்சி தலைவர்களுக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இந்த அநீதிக்கு நீங்கள் அனைவரும் கடுமையான அழுத்தங்களை கொடுக்கவில்லை எனில் நாளைக்கு உங்களுக்கும் இதே நிலையை கூலிப்படை கும்பல் செய்யும். ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி நாங்கள் குரல் கொடுத்தோம். உங்களுக்காக குரல் கொடுக்க எவரும் இருக்க மாட்டார்கள்.
பாதிக்கப்பட்ட பக்கம் நின்று குரல் கொடுப்பவர்களே உண்மையான அரசியல்வாதிகள் , போராளிகள். மறைந்த ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பற்றி தெரியாத முட்டாள்கள் எது வேண்டுமானாலும் பேசலாம். எழுதலாம். அவரோடு நெருங்கி பழகி பயணித்த நபர்களுக்கு தான் தெரியும் மறைக்கப்பட்ட உண்மையும் , வரலாறும். ஆருத்ரா நிதி நிறுவன மோசடியை தமிழ்நாடு அரசு நோண்டி விசாரித்தால் அதில் உள்ள பிஜேபி புள்ளிகள் இவரை கொலை செய்ததார்களா? என அறிய முயற்சிக்கலாம்.
குறிப்பு : மறைந்த ஆம்ஸ்ட்ராங் யார்..? என்பதற்கு அவரின் இறுதி அஞ்சலியில் கூடிய இலட்சக்கணக்கான மக்கள் கூட்டமே சான்று. உங்களில் குற்றம் இல்லாதவர்கள் முதல் கல்லை ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது எறியட்டும். அவர் எப்படிப்பட்டவர் என தீர்ப்பு வழங்க நீங்கள் ஒன்னும் நீதிபதிகள் அல்ல.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..