“வந்துட்டான் சுப்பு ஆறுமுகம்., கவிதை பாடுவான்” மஹா பெரியவா ஆன்மீக – கதை-16
தமிழ்கூறும் நல்லுலகில் *கவிஞரும் வில்லுப்பாட்டு கலைஞருமான சுப்பு ஆறுமுகத்தை ( இன்று இவர் பிறந்த தினம்)* தெரியாதவர்கள் இருக்க முடியாது. நெல்லை மண்ணில் உதித்த வில்லுப்பாட்டு இசைக் கலையை உலகெங்கும் பரப்பியதில் அவருக்கென்று தனி இடம் உண்டு.
84 வயதிலும் ஒரு இளைஞனைப் போல பல ஊர்களுக்குச் சென்று வில்லிசையை ஒலிக்கச் செய்கிறார் சுப்பு ஆறுமுகம். காந்தி மகானும் காஞ்சி மகானும் என் இரு கண்கள்” என்றவரிடம் தொடர்ந்து பேசினோம்.
‘காந்தி வந்தார்’ புத்தகத்தை காஞ்சி மகா பெரியவரிடம் கொடுத்து ஆசி பெற வேண்டும் என்பது ஆசை. ஒரு நாள் கிளம்பிச் சென்று விட்டேன். அப்போது மகா பெரியவா தேனம்பாக்கத்தில் இருந்தார். புத்தகத்தை அவர் முன்னால் வைத்து ஆசீர்வாதத்தை வேண்டினேன். முதல் பக்கத்தை திருப்பியவர் மேலே போகவில்லை.
‘இந்த பரந்த உலகில் கால் காந்தியாக, அரை காந்தியாக, முக்கால் காந்தியாக இல்லாமல் முழுக்காந்தியாக வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு சமர்ப்பணம்’ என்று குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்துவிட்டு என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தவர், அடுத்த ஒரு மணி நேரம் எதுவும் பேசவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர் எதுவும் சொல்லாதபோது எப்படி எழுந்து செல்வது என்று தயக்கம் எனக்கு.
சரி… நாளைக்கு அடுத்த நாள் காஞ்சிபுரத்தில் ‘ஆகம சில்ப சதஸ்’ மாநாடு நடக்கறதே தெரியுமா?” என்றார் பெரியவா. தலையாட்டினேன் நான். அந்த மாநாட்டில் நீ திருநாவுக்கரசர் சரித்திரத்தை சொல்லுவியா?” என்றார்.
எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ‘முதல் தடவையாகப் பார்க்கிறோம். நம்மை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கிறார்களே’ என்ற மகிழ்ச்சியுடன் கூடிய அதிர்ச்சி. ‘பெரியவா உத்தரவு’ என்று விடைபெற்று, சென்னை வந்தேன்.
நிகழ்ச்சிக்கு இடையில் ஒரே நாள்தான். ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் நிகழ்ச்சிக்கு பாட்டுக்களை தயார் செய்தேன். மொத்தம் 48 பாட்டு. மூன்றரை மணி நேர நிகழ்ச்சி அது. நிகழ்ச்சியன்று மதியம் தேனம்பாக்கம் சென்றேன்.
கொசு வலைக்குள் படுத்திருந்தார் பெரியவா. ‘கச்சேரிக்கு வரணும்’ என்று சொல்லி வணங்கினேன். ‘கண்டிப்பா வர்ரேண்டா’ என்றார் மகா பெரியவா. எனக்கு மாலை ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆறு மணி ஆயிற்று. பெரியவா வரவில்லை. அப்படியே நேரம் ஆகிக் கொண்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ‘உங்களுக்கு எட்டு மணிவரைதான் டைம்; மேலே கொடுக்க முடியாது. பெரியவா வரமாட்டார். அவர் தேனம்பாக்கம் போய் பல வருஷம் ஆகிவிட்டது. நீங்க தாமதிக்காமல் கச்சேரியை ஆரம்பிங்கோ’ என்றார்கள். ‘என்கிட்டே சொல்லியிருக்கிறார் வந்துவிடுவார்’ என்று நான் சொல்வதை அவர்கள் நம்பவே இல்லை.
இப்படி எங்களுக்குள் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும்போது, ‘ஜய ஜய சங்கர.. ஹர ஹர சங்கர’ என்ற சரணகோஷம் கேட்டது. சொன்னபடியே பெரியவா வந்து விட்டார். எனக்கு அழுகை வந்துவிட்டது.
கோபுரத்தை தூர இருந்து கும்பிடுவதுபோல, கையை உயரத் தூக்கி வணங்கிவிட்டு, மேடையை நோக்கி ஓடினேன். அதற்குள் பெரியவா மேடைக்கு அருகில் உட்கார்ந்து விட்டார்.
கையை தூக்கி ஆசீர்வாதம் செய்ய ‘தந்தனத்தோம்’ என்று வில்லைத் தட்டிவிட்டு, நாவுக்கரசரின் சரித்திரத்தைத் தொடங்கினேன். கடைசிவரை உட்கார்ந்து ரசித்துக்கேட்டார். சில இடங்களில் கையை தூக்கி நிறுத்தச் சொல்லி விளக்கங்கள் கேட்டார். முடிந்தவுடன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தேன். ‘நல்லா பண்ணின’ என்று வாழ்த்தியருளியது அந்த மானுட தெய்வம்.
அதன்பின் மடத்துக்குச் செல்லும்போதெல்லாம், ‘வந்துட்டான் சுப்பு ஆறுமுகம். கவிதை பாடுவான்’ என்று சொல்லி சிரிப்பார். ஒருமுறை, ‘ஏண்டா உன் நிகழ்ச்சியில் ஏன் புல்லாங்குழல் கிடையாது’ என்றார்.
நான் முந்திரிக் கொட்டைத் தனமாக, ‘அது வடக்கத்தி வாத்தியம் அல்லவா’ என்றேன். ‘ஆமாம் ஆமாம் அது கிருஷ்ணனோட வாத்தியம் இல்லையா’ என்றார் மகா பெரியவா. எனக்கு பொட்டில் அடித்தது போன்றிருந்தது. ‘பெரியவா மன்னிக்கணும். நான் திசையை கவனித்தேனே தவிர தெய்வத்தை நினைக்கலியே’ என்று நமஸ்கரித்து, எழுந்தேன். அது முதல் சில குறுகிய எண்ணங்கள் என்னிடமிருந்து விடைபெற்றுக் கொண்டன.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..