அந்த புனிதப் பாத்திரம் சொல்லாமல் சொன்ன நிகழ்வு இது..? மஹாபெரியவா ஆன்மீக கதை -19
அன்று மாலை அவர் இல்லம் சென்றேன். அழகான எளிமையான சிறிய இல்லம். மணம் கமழும் ஒரு சிறு அறையில் மஹா பெரியவாளின் படம். மஹா பெரியவாளின் முன்னிலையில் ஒரு சிறு பெட்டி இருக்க அதிலிருந்து ஒரு பாத்திரத்தை பயபக்தியுடன் வெளியே எடுத்து வைத்தார்.
கல்கத்தாவைச் சேர்ந்த இளம் விதவை. கணவர் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர். கணவர் காலத்தில் வியாபாரம் முடங்க ஆரம்பிக்க, அவள் திருமணம் முடித்த சில வருடங்களில் வியாபாரம் முழுதுமாக நொடித்து விட்டது. வியாபாரத் தோல்வி கணவர் உள்ளத்தையும் உடலையும் உருக்க, நோய்வாய்ப்பட்டு சில வருடங்களிலேயே அவர் இறந்தும் போனார்.
இளம் விதவை – ஐந்து குழந்தைகளுக்குத் தாய் – கணவர் இறந்த மறு நாளே புகுந்த வீட்டினர் அவளை அண்ட விடாது ஒதுக்கியும் ஒதுங்கியும் விட்டனர். பிறந்த வீட்டில் பாதுகாப்பு கிடைக்கும் எனக் கதவைத் தட்டியவளுக்கு, பிறந்த வீட்டார் ராசியில்லாதவள் அமங்கலி என இரட்டைத் தாழ்ப்பாள் போட்டனர்.
தன் உடலையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு – ஒன்றும் புரியாத பிஞ்சுகளாய் இருக்கும் ஐந்து குழந்தைகளை வளர்க்க வேண்டிய பாரம் – எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாயம் ராசியில்லாதவள் என சூட்டிய முள் கிரீடம் – எல்லாம் அவளை அழுத்தியது.
கணவர் சேமித்து வைத்து விட்டுப் போன சிறு தொகையைக் கொண்டு பசி பட்டினி இல்லாது குடும்பத்தை நடத்தினாள். அதுவும் சில காலமே. வருடங்கள் செல்ல செல்ல இரு வேளை சோறு ஒரு வேளையானது. பின்னர் அதுவும் கஞ்சியாக மாறியது. கைப் பணம் கரைய கரைய அச்சமும் கவலையும் சூழ்ந்தது.
குடும்ப வருமானத்திற்கு குப்பை பொறுக்குவது என முடிவு செய்தாள். நாள் முழுதும் அலைந்து பெரிய அலுவலகங்களாக சென்று காகிதங்களை பொறுக்கி, அவற்றை விற்று அதன் மூலம் வரும் வருமானம் கொண்டு குடும்பம் நடத்தினாள். துறைமுகப் பகுதியில் வாகனங்களிலிருந்து விழும் நெல் அரிசி கோதுமை போன்ற தானியங்களை சாலையைப் பெருக்கி எடுத்து வந்தாள்.
சிதறிய தானியங்களைக் கொண்டு தன் பிள்ளைகளின் வயிற்றுக்கு கஞ்சி ஊற்றினாள். ஆனால் எப்படி ஐந்து பிள்ளைகளையும் கரை சேர்ப்பேன் என்ற கவலை அவளைத் தினமும் வாட்டியது. குடும்பம் மிகவும் பரிதாப நிலையில் இருந்தது. கணவர் இறந்து இப்படியே ஐந்து வருடங்கள் போய்விட்டது.
இந் நிலையில் நமது மஹாபெரியவா கல்கத்தாவில் முகாமிட்டிருந்தார். அவரைத் தரிசித்த மக்கள் அவரைப் பற்றி பலவாறு ப்ரமிப்புடனும் பக்தியுடனும் பேச பேச அந்த பேச்சுக்கள் இவள் காதையும் எட்டியது. அவளுக்கும் அவர்கள் சொல்லும் தாக்குர்ஜியை பார்க்க வேண்டும் என ஆவல் பிறந்தது.
அவரை தரிசித்து விட்டு வந்தால் என் வாழ்வில் ஒரு விடியல் இருக்கும் என எண்ணினாள். இரவெல்லாம் அதே நினைவுடன் உறங்கியவள், மறு நாள் ஸ்நானம் செய்து விட்டு, கையில் ஒரு காலி எண்ணெய் தூக்கை எடுத்துக் கொண்டு மஹா பெரியவா முகாமிட்டிருந்த இடம் வந்தாள்.
தாக்குர்ஜியை சுலபமாக சந்தித்து ஆசி பெற்றுவிடலாம் என நினைத்து வந்தவள் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு திகைத்து நின்றாள். வருவோர் போவோரின் ஏளனப் பார்வையும், அவர்கள் அவளைக் கண்டு விலகிச் செல்வதையும் கண்ட பொழுது தான் – அவளுக்கு அவளின் நிலைப் புரிந்தது. தாக்குர்ஜியை காண வந்த கூட்டத்தினரின் மீது அவள் பார்வை சென்றது. அனைவரும் நல்ல ஆடை அணிந்தவர்கள் – படித்தவர்கள் – உயர் அதிகாரிகள் – என பலதரப்பட்ட மக்கள்.
தன்னை எண்ணினாள். எண்ணெய் ஆட்டுவதைக் குலத் தொழிலாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவளின் தலையில் ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. வறண்ட கூந்தல்; எத்தனை துவைத்தும் நீங்காது அழுக்குப் படிந்து போன சேலை, தன் வாழ்க்கை தரத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டும் கிழிந்த ஒட்டுப் போட்ட ஆடை. எப்படி இந்தக் கூட்டதில் நம்மை இணைத்துக் கொள்வது.
கூட்டத்தில் கலக்க முயற்சித்தால் நிச்சயம் விரட்டப் படுவோம் என புரிந்துக் கொண்டாள். அந்தக் கூட்டத்தைப் பார்க்க பார்க்க உள்ளத்தில் அச்சம் சூழ்ந்தது. ஆனால் தாகுர்ஜியிடம் ஆசி பெற வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் போகவில்லை.
கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்றாள். கூட்டத்தினர் பார்வையாலையே அவளை விரட்ட தள்ளி நின்றாள். அங்கிருந்தவர்கள் மேலும் அவளை விரட்ட – மேலும் மேலும் ஒதுங்கினாள் . இப்படியே கூட்டத்தை விட்டு 60 – 70 அடி தள்ளி விரட்டப்பட்டாள். கூட்டம் கலைந்தவுடன் அவரைத் தரிசிக்கலாம் எனக் காத்திருந்தாள். ஆனால் வருவதும் போவதுமாக இருந்த மக்கள் கூட்டம் குறையவில்லை. நேரம் நகர்ந்துக் கொண்டே போனது.
மனதில் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் வந்து போயின. தன் வாழ்க்கை சம்பவங்களால் கண்களும் மனதும் பொங்கியது, தன் நிலையைப் புரிந்துக் கொண்டவள் தாகுர்ஜியை அருகில் சென்று ஆசி பெறும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவரை தூரத்திலிருந்தாவது தரிசித்து விட்டால் போதும் , தன் வாழ்க்கையில் மாற்றம் வரும் என பரிபூரணமாக நம்பினாள்.
– வீர பெருமாள் வீர விநாயகம்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..