ADVERTISEMENT
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 26-ஆம் தேதி உருவாக வாய்ப்பு
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 26-ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் முக்கிய அணைகளில் நீர் நிரம்பியுள்ளது.
சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் உள்ள 16 சுரங்க பாதைகளில் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காமல் உள்ளதால் வாகன போக்குவரத்து சீராக உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கனமழை காரனமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 22 விமானங்கள் ஒரு மணிநேரத்துக்கு மேல் தாமதமாக புறப்பட்டது.
தஞ்சை, புதுச்சேரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் சாலையில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவித்தார்.
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
26-ஆம் தேதி அந்தமான் கடற்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக கூடும் என்றும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை அடுத்து வரும் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்த அவர், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 26 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.