ADVERTISEMENT
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்
அக்னிபத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளதாக ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு 25- ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
துங்கார்பூர் மாவட்டம், சாக்வாரா பகுதியில் நடைப்பெற்ற பொதுகூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து அரசு நியமனங்களிலும், காங்கிரஸ் அரசு ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ்-சின் ஒழுங்கற்ற நிர்வாகத்தால், இளைஞர்களின் கனவுகள் நொறுங்கி போய் விட்டதாக தெரிவித்த பிரதமர், ராஜஸ்தானில் ஒருபோதும் அசோக் கெலாட் அரசு அமையாது என கூறினார்.
ராஜஸ்தானில் காஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்குவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்த நிலையில், பாஜக ஆட்சி அமைத்தால் 450 ரூபாய்க்கு வழங்குவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தோல்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தன்னை ஓபிசி என அடையாளப்படுத்திய பிரதமர் மோடி, ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்த தொடங்கிய பின், நாட்டில் ஏழை என்ற ஒரே ஜாதி மட்டுமே இருப்பதாக மாற்றிப் பேசி வருவதாக விமர்சித்தார்.
கோடிக்கணக்கில் நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என கூறி ஆட்சிக்கு வந்த பாஜக, இருக்கும் வேலைவாய்ப்புகளையும் குறைத்து வருவதாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, இளைஞர்களின் கனவுகளை அக்னிபத் திட்டத்தின் மூலம் பாஜக சிதைத்துள்ளதாக தெரிவித்தார்.
ஷாபுரா பகுதியில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜகவுக்கு வாக்களித்தால் மத்திய பிரதேச நிலைதான் ராஜஸ்தானுக்கும் ஏற்படும் என தெரிவித்தார்,
மத்திய பிரதேசத்தில் பாஜக 18 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தும் மக்கள் பணியை முறையாக மேற்கொள்ளாததால் ஜாதி, மதங்களின் அடிப்படையில் வாக்கு சேகரித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
