இதுவும் கடந்து போகும்..! குட்டிஸ்டோரி..!
வாழ்க்கையில் இன்பங்கள் மற்றும் துன்பங்கள் மாறி மாறி வந்து கொண்டு தான் இருக்கும். அப்போது துன்பத்தை கண்டு துவண்டு போகாமலும் இன்பம் வரும் அகந்தை கொள்ளாமலும் இருக்க வேண்டும்.
அந்த சலனம் இல்லாத மனதை மனிதன் அடையும்போது அவன் ஞானி ஆகிறான்.
கதை ஒன்றை பார்க்கலாமா.?
ஒரு அரசன் ஒரு நாட்டினை ஆட்சி செய்து வந்தான். அந்த நாட்டிற்கு ஒரு ஞானி பார்க்க வந்தார். அரசன் அந்த ஞானியை பார்க்க வந்தார். அந்த ஞானி அந்த அரசருக்கு மோதிரம் ஒன்றை பரிசளித்தார்.
அரசரே இந்த மோதிரத்தில் ஒரு பெட்டகம் இருக்கிறது, இதனை நீங்கள் மிகவும் துன்பமான சமையத்திலும் மிகவும் இன்பமாகவும் இருக்கும் சமையத்திலும் பிரித்து பார்க்க வேண்டும், ஆனால் மற்ற சமையங்களில் இதனை பிரித்து பார்க்க வேண்டாம் என கூறினார்.
அரசனும் இந்த மோதிரத்தை வாங்கி விரலில் அணிந்துக் கொண்டார். அப்படியே சில காலம் சென்றது. ஒரு நாள் எதிரி நாட்டு மன்னன் அரசன் மீது படையெடுத்து வந்தான் அரசனை வென்று நாட்டை கைப்பற்றி, அரசனை நாட்டை விட்டு துரத்தினான்.
அரசன் எதிரி நாட்டு படையினரிடம் இருந்து தப்பிக்க தனது குதிரையில் காடு மலைமேடுகளில் சென்று கொண்டிருந்தான், அப்போது ஒரு மலை உச்சியின் முகட்டில் குதிரை வந்து நின்றது. முன்பு ஒரு அதள பாதாளம் இருந்தது பின் எதிரி நாட்டு படை இருந்தது. அவ்வளவுதான் நமது காலம் முடிந்துவிட்டு என நினைத்து மிகவும் கவலை அடைந்தான்.
அப்போது சூரிய ஒளி பட்டு கையில் இருந்த மோதிரம் மின்னியது, அப்போ ஞானி சொன்னது அரசனுக்கு நினைவுக்கு வந்தது, உடனே அந்த பெட்டகத்தை பிரித்து பார்த்தான், ஒரு சிறிய துணியில் “”இதுவும் கடந்து போகும்”” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
அந்த வாசகத்தை படித்த அரசன் நம்பிக்கை கொண்டான் உடனே வேறு திசையில் சென்று ஒரு குகையில் மறைந்துக் கொண்டான்.
எதிரிகள் அரசனை தேடி பின்வாங்கினார்கள். அரசன் மீண்டும் தனது படைகளை திரட்டி மறுபடியும் போரிட்டு தனது நாட்டை கைப்பற்றி தனது நாட்டிற்கு மீண்டும் அரசனானான்.
மீண்டும் தனது கோட்டைக்குள் பரிவாரங்களுடன் நுழைந்தபோது மக்கள் அவருக்கு மாலை சூட்டி பாராட்டினார்கள். அப்போது தன்னை பற்றி நெகிழ்ந்து தான் என்ற அகந்தை வந்தது, அப்போ சூரிய ஒளி பட்டு மறுபடியும் அந்த மோதிரம் மின்னியது. உடனே ஞானி சொன்னதை நினைவுப்படுத்தி பெட்டகத்தை திறந்து பார்த்தான். அதிலிருக்கும் “”இதுவும் கடந்து போகும்”” வாசகத்தை படித்தான்.
அப்போது அரசனின் மனம் அமைதி கொண்டது. வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை கண்டு சலனம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என கற்றுக் கொண்டான்.
இதையே நாமும் கற்றுக் கொண்டு வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.