ஹரியானா மாநிலம் குருகிராம் மருத்துவமனையில் ஐசியு வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்
46 வயது விமான பணி பெண்ணாக வேலை பார்த்து வந்த ஒருவர், கடந்த ஏப்ரல் 6ம் தேதி பயிற்சி ஒன்றுக்காக குருகிராம் வந்து , அங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, நீச்சல் குளத்தில் குளிக்கும் போது , மூழ்கி விட்டார். இதையடுத்து, அவரை மீட்ட ஹோட்டல் ஊழியர்கள் குருகிராமிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து அந்த பெண்ணின் கணவருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவரது கணவரும் மருத்துவமனைக்கு வந்து விட்டார்.
பின்னர் பாதிப்பு தீவிரமாக இருந்ததால் வேறொரு மருத்துவமனைக்கு அந்த பெண்ணை மாற்றி, அவசர சிகிச்சை பிரிவில் வைத்து வென்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்நிலையில் , சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஊழியர் தன்னை பாலியல்பலாத்காரம் செய்ததாகவும், மயக்க நிலையில் இருந்தாலும் தன்னால் அந்த வலியை உணர முடிந்ததாகவும் கணவரிடத்தில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண தனது கணவருடன் ஏப்ரல் 13-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிரமான விசாரணையில் இறங்கினர். மருத்துவமனையிலுள்ள 800 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து, நேற்று தீபக் என்ற ஊழியரை கைது செய்தனர். இவர், ஐ.சி.யூவில் டெக்னிஷியனாக வேலை பார்த்து வந்தார். தற்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடத்தில் தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.