தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தும் ஆளுநரை மாற்ற வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத்தொடர் நேற்றைய தினம் தொடங்கியது. இதனை தொடர்ந்து, மக்களவையில் இன்று பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கக் கோரி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால், தமிழ்நாடு அரசின் மசோதாக்களைப் பரிந்துரைக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். இப்படி இருந்தால் அரசை எப்படி நடத்துவது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், ஆளுநர் தனது அதிகாரத்திற்குட்பட்டு செயல்படாமல் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டார். எனவே, தமிழ்நாடு ஆளுநரை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.