12 மணி நேரம் வேலை சட்ட முன்வடிவை திரும்பப் பெற்ற முதலமைச்சருக்கு நன்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.
உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாளாம் மே நாளில், தமிழ்நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கியிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக சட்டமன்றத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் ( தமிழ்நாடு திருத்த) சட்டம் -2023, சட்ட முன்வரைவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது வரவேற்கத் தக்கதாகும்.
8 நேரம் வேலை என்பதை உலகத் தொழிலாளர் வர்க்கம் இரத்தம் சிந்தி உயிர்ப்பலிகளைக் கொடுத்து பெற்ற உரிமையாகும். அதனைப் பாதுகாக்கும் வகையில், திராவிட மாடல் அரசு தொழிலாளர்களுக்கு என்றும் துணையாக இருக்கும் என்பதை முதலமைச்சர் அவர்கள் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவிலேயே முதன் முதலில் மே தினத்தை 1923 ஆம் ஆண்டு சென்னையில் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலனார் ஆவார்.
தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு தமிழ்நாட்டில் மே தினம் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு நிறைவில் உறுதி கொள்வோம்.