கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதிமுக அவைத்தலைவர் துரைசாமி, கட்சி பொதுச்செயலாளர் வைகோவுக்கு எழுதிய கடிதத்தில் துரை வைகோவிற்கு பதவி வழங்கப்பட்டது குறித்து விமர்சித்ததோடு, திமுகவுடன் மதிமுகவை இணைத்துவிடலாம் என்றும் விமர்சித்திருந்தார். இது மதிமுக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு முழுவதும் மதிமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் 70 சதவீத தேர்தல் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் முடிந்தது. சின்ன சலசலப்பு கூட இல்லாத இந்த சமயத்தில் கட்சிக்குள் சிக்கல் இருப்பது போல் பிரச்சனையை உருவாக்க சிலர் முயன்றார்கள். ஆனால் அது தோல்வியில் முடிந்துவிட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சியை பற்றி எதையும் நினைக்காத துரைசாமி, திடீரென அறிக்கை விட ஏதோ உள்நோக்கம் இருப்பதாக குற்றச்சாட்டிய வைகோ, மதிமுகவிற்கு எப்போதும் தொண்டர்களின் முழு ஆதரவு இருப்பதாக கூறினார்.
30 ஆண்டுகளாக எவ்வளவோ துன்பங்களையும், போராட்டங்களையும் கடந்து வந்த மதிமுக, இதையும் கடந்து செல்லும் எனக்கூறினார். ஜனநாயக முறைப்படி கட்சி நடத்தும் மதிமுக இதுபோன்ற கருத்துக்களை புறக்கணிப்பதாகவும், நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார்.