பெண்கள் குத்துச்சண்டை போட்டிகளில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள மேரி கோம், ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றவர். எம்.பியாகவும் உள்ளார். மேரி கோமும், அவரது கணவர் ஓன்லரும் பிரிய இருப்பதாக சமீபகாலமாக வதந்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில், கணவர் ஒன்லரிடமிருந்து விவாகரத்து பெறுவதாக மேரி கோம் அறிவித்துள்ளார். இதுகுறித்து மேரி கோம், ”இப்போது, நானும் எனது கணவர் ஓன்கோலர் கோமும் திருமண பந்தத்தில் இல்லை. பரஸ்பர ஒப்புதலின் மூலம் விவாகரத்தை உறுதி செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவருடைய வழக்கறிஞர் ரஜத் மாத்தூரின் அறிக்கையில்,’கோம் மக்களின் சட்டப்படி கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 20 ம் தேதி கோம் இன பெரியவர்கள் முன்னிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். மேரி கோம் மற்றொருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக மீடியாக்கள் தவறான செய்திகள் வெளியிடுகின்றன.
மேரி கோமுக்கும் அவரின் குத்துச்சண்டை அறக்கட்டளை தலைவராகவுள்ள ஹிதேஷ் சவுத்ரியுடன் எந்த தொடர்பும் இல்லை. அவர்களின் தொடர்பு முற்றிலும் தொழில்முறையிலானது. அதில் எந்த உண்மையும் இல்லை . இதுதொடர்பாக ஊடகங்களில் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹிதேஷ் சவுத்ரி மற்றொரு குத்துச்சண்டை வீராங்கனையின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மேரி கோம் தன் 4 குழந்தைகளுடன் பரிதாபாத்திலும், அவரது கணவர் ஓன்லர் டெல்லியிலும் வசிப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஓன்லர் தோற்றார். அதனால் 3 கோடி ரூபாய் வரை இழந்துள்ளதாக தெரிகிறது. இதுவும் அவர்கள் பிரிய காரணமென்று கூறுகிறார்கள்.
கடந்த 2000ஆம் ஆண்டு போட்டி ஒன்றுக்குச் செல்லும் வழியில் மேரி கோமின் பொருட்களை காணாமல் போனது. அப்போது, டெல்லி பல்கலையில் படித்த ஓன்லர் மேரி கோமுக்கு உதவியுள்ளார். அப்படிதான் அவர்களுக்குள் நட்பு உருவானது. அந்த நட்பே அவர்களை திருமண பந்தத்துக்கு அழைத்து சென்றது. . 2005ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் பிறந்தனர். மேரிகோம் பெண் குழந்தையை விரும்பியதால், 2018ஆம் ஆண்டு இந்த தம்பதி ஒரு மகளை தத்தெடுத்தனர்.
தற்போது, தன்னை தனிமையில் இருக்க விடும்படி மேரி கோம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.