ஒன்றிய அரசுக்கு கேரளா அரசு கண்டனம்..! இப்போது கூட பழிவாங்கும் நோக்கமா..?
கேரளா வயநாடு சூரல் மழை பகுதியில் கடந்த ஜூலை 29ம் தேதி இரவு கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 350க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்..
இந்த இயற்கை பேரிடரில் தற்போது வரை 3 கிராமங்கள் அடியோட அழிக்கப்பட்டிருப்பதாகவும்., 350க்கும் மேற்பட்டோர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் 300க்கும் மேற்பட்டோரின் உடல் இன்னும் கிடைக்காததால்.., 6வது நாளாக ராணுவம், பிராந்திய ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு துறையினர் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
350க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ள நிலையில் நேற்று திடீரென ரேடார் சிக்னல் கிடைக்காமல் போனதால்.., உடல்களை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஒரு சில பகுதிகளில் சேரும் சகதியுமாக இருப்பதால் அதற்குள்ளும் சிலர் சிக்கிக்கொண்டு இருக்கலாம் என எண்ணிய மீட்பு படையினர் இரவு பகலாக மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களை வயநாடு மாவட்டம் முழுவதும் உள்ள 91 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடை தாண்டி 17 நிவாரண முகாம்களில் 2597 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்களில் தங்களின் குடும்ப உறவுகள் இருக்கிறார்களா என்று முகாம்களிலும், மருத்துவமனைகளிலும் பலர் தேடி அலையும் காட்சி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.
இத்தகைய வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ள சூழலிலும், இதுவரை பாஜக அரசு தேசிய பேரிடராக அறிவிக்காமல் இருப்பது ஏன் என கேரளா அரசு கேள்வி எழுப்பி வருகிறது. இதுகுறித்து, கேரளா மாநிலம் வருவாய்துறை அமைச்சர் ராஜன் கூறுகையில், வயநாட்டில் ஏற்பட்டது ஒரு பேரழிவு இதில் ஏராளமானோர் வீடு, உறவினர்களையும் இழந்துள்ளனர். இதுவரை இப்படி ஒரு பேரழிவு நம் நாட்டில் எங்குமே நடந்ததில்லை. எனவே இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பாஜக அரசிடம் கேரளா அரசு பலமுறை வலியுறுத்தியும். முதல்வர் பினராயி விஜயன், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலரும் இதே கோரிக்கையை வலியுறுத்தியும் இது தொடர்பாக ஒன்றிய அரசு இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. இப்படி ஒரு சூழலில் கூட பாஜக அரசு கேரளா பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என பழிவாங்குமா..? என கேள்வி எழுப்பியுள்ளார். அதே சமயம் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்..