ஹிஜாப் வழக்கில் இன்று(மார்ச்.15) தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பெங்களூருவில் ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து,ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம்’ என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர்.
அதன்பின்னர்,ஹிஜாப்புக்கு ஆதரவாக மற்றும் எதிராகவும் போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், விசாரணை முடியும் வரை ஹிஜாப் அல்லது காவித் துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களோடு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில்,ஹிஜாப் தடை தொடர்பான வழக்கில் இன்று(மார்ச்.15) காலை 10.30 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெங்களூரு நகர் முழுவதும் இன்று(மார்ச்.15) காலை முதல் வருகிற 21-ந் தேதி வரை ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களில் கூட்டம் கூடவும், கொண்டாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடவும் அம்மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது.
மேலும், உடுப்பி, கன்னடா உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post