திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா தியாகேசா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ தலங்களில் பழமை வாய்ந்த இக்கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். சைவ மரபில் பெரிய கோவில் என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு சொந்தமான தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. அலங்கரிக்கப்படாத இந்த தேரின் பீடத்தின் உயரம் 36 அடி, அகலம் 36 அடி ஆகும்.தேரின் மேல் ஆயக்கலைகள் 64யும் விளக்கும் சிற்பங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் ஆழித்தேர் இதர கோவில்களின் தேர்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது.
தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று(மார்ச்.14) அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து இன்று(மார்ச்.15) சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு, மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரிகிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் புவனப்பரியா உள்ளிட்டோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து பச்சைக்கொடி காட்டியவுடன் ஆரூரா! தியாகேசா!! என விண்ணதிர முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். இந்நிகழ்வில் திருப்புகழூர் வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் கலந்து கொண்டனர்.
ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம். திருவாரூர் வீதிகளில் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்தனர்.