முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஜெய்ராம் ரமேசும் மோடியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 34வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயி பேசியுள்ள பழைய வீடியோ ஒன்றை தன் எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில், வாஜ்பாய் தனக்கு கடுமையான கிட்னி பாதிப்பு இருந்ததாகவும், அப்போது , தன்னிடத்தில் பணம் இல்லாததால், தன்னால் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்க முடியாமல் இருந்தேன் என்று கூறியுள்ளார். இந்த தகவல் எப்படியோ அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு தெரிந்து விட்டது. உடனே என்னை கூப்பிட்ட ராஜீவ்காந்தி அமெரிக்காவுக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் என்னையும் இடம் பெற செய்தார். அங்கு, எனக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார். மீண்டும் நான் இந்தியா திரும்பிய போது, முற்றிலும் குணமடைந்திருந்தேன் என்று வாஜ்பாய் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ்காந்தியிடத்திலுள்ள பெருந்தமை மோடியிடத்தில் இல்லை என்று காட்டமாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கடந்த 1950 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் செப்டம்பர் மாத காலக்கட்டத்தில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவும் அமெரிக்கா செல்வது நடைமுறையில் இருந்தது. 2014ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததும் அந்த பாரம்பரியத்தை நிறுத்தினார். தற்போது, ஆபரேஷன் சிந்தூர் காரணமாக மோடியின் சர்வதேச இமேஜ் முற்றிலும் சரிந்து விட்டது. எந்த நாடும் வெளிப்படையாக இந்தியாவை ஆதரிக்கவில்லை. இதையடுத்து, இப்போது வெளிநாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளிக்க பல நாடுகளுகக்கு மோடி அனைத்துக்கட்சி எம்.பி.க்களை அனுப்புகிறார். இல்லையென்றால், இங்கு எழும் பல கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியாமல் போகுமென்பதால், இப்படி ஒரு குயுக்தியை அவர் கையாண்டுள்ளார்.
இன்று நாம் ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினத்தைக் கடைபிடிக்கிறோம். மோடியிடம் மனிதநேயம், பிறருக்கு நன்மை செய்வது, கண்ணியம் ஆகியவை அறவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.