அதிகரிக்கும் வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை..! கேரளாவிற்கு உதவும் தமிழ்நாடு..! முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு..!
கேரள மாநிலம் வயநாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உடலில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் இன்னும் விபத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை :
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. வயநாடு மாவட்டத்தில் நேற்று இரவு 30 சென்டி மீட்டருக்கும் அதிகமாக பெய்த கனமழையின் காரணமாக மேப்பாடி, முண்டக்கை, வைத்திரி, சூரல்மலை, வெள்ளரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த மண் சரிவில் 500க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், பள்ளி கூடங்கள் மண்ணில் புதைந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வயநாடு பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்த முகாமும் நிலச்சரிவில் சிக்கியதால், 200க்கும் அதிகமானோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணிகளில் உதவ கண்ணூர் பாதுகாப்புப் படையின் 2 குழுக்கள் வயநாடுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்து சாலைகள் துண்டிக்கபட்டுள்ளதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக இந்தியா விமானப்படையின் எம்.-ஐ-17 மற்றும் ஹெச்.ஏ.எல் துருவ் ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. இதனிடையே அமைச்சர்களுடன் வயநாட்டிற்கு வந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்தார்.
பெருமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் நெருக்கடியான சூழலில் கேரளாவுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக அறிவதாகவும் முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் உதவிகளை கேரளாவிற்கு வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..