கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணம்..! போராட்டத்தில் இறங்கிய மக்கள்..! அமைச்சர் மூர்த்தி அளித்த உறுதி..!
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் நகர் முழுவதும் உள்ள 2000த்திற்கும் மேற்பட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே அதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கடந்த ஜூலை 10ம் முதல் அமலுக்கு வரும் என முன்னதாகவே அறிக்கை வெளியானது.
மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேச்சுவார்த்தை :
இதனால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது..
அந்த பேச்சு வார்த்தையில் 2020க்கு முன்பு போலவே சுங்கக் கட்டணம் இல்லாமல் செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உள்ளூர் வாகனங்கள் ஆதார் அட்டையை காண்பித்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சுங்கச்சாவடியை அகற்றுவது குறித்து பேசவில்லை. இதனையடுத்து மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி திட்டமிட்டபடி பந்த் நடைபெறும் என கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு போராட்டக் குழு அறிவித்தது.
இந்நிலையில் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்று கப்பலூர் சுங்கச்சாவடி அருகே 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடும் கட்டுப்பாட்டுகளுடன் வாகனங்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை கடந்து வருகின்றன. இதனால் கப்பலூர் சுங்கச்சாவடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி., சுங்கச்சாவடி எதிர்புக் குழு நிர்வாகிகள் , கிராம மக்கள்., மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுங்கச்சாவடி எதிர்ப்புப் போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது அப்போது பேசிய அமைச்சர் மூர்த்தி.,
திருமங்கலம் என்பதற்கான ஆதார் அட்டையைக் காண்பித்தால் போதும்.., கட்டணம் வசூலிக்கப்படாது. அது ஆட்டோ, சரக்கு ஆட்டோ என்றாலும் அனுமதிப்பர். ஆதார் அட்டை இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. பேச்சுவார்த்தையின்போது அமைச்சர், ஆட்சியரிடம் பொதுமக்கள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பத்துடனேயே கூட்டம் நிறை வடைந்தது.
பின்னர், அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வணிகர்கள் சுங்கச்சாவடியை 60 கி.மீ. தொலைவில் வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை வைத்தனர். 2012-ல் இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. அன்று முதல் 2020-ம் ஆண்டு வரை திருமங்கலம் பகுதி மக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக சில நேரங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பிரச்சினை ஏற்பட்டது.
இதற்கு நிரந்தரத் தீர்வாக 2020-ம் ஆண்டு வரை இருந்த நடைமுறையை பின்பற்ற முடிவு எடுக்கப்பட்டது. திருமங்கலம் பகுதி மக்கள் தங்கள் வாகனங்களில் சுங்கச்சாவடியில் 1 மற்றும் 10-வது வழித்தடத்தில் கட்டணமின்றி செல்லலாம் என்று கூறினார்.