”நான் மிகவும் துரதிருஷ்டமானவள்”- வினேஷ் போகத்..!
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்தமனுவை விசாரித்த நடுவர் மன்றம், கடந்த 14-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு சுக்கு நூலக நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார்.
எனினும், தகுதி நீக்கம் காரணமாக அவரால் போட்டியில் தொடர்ந்து பங்கேற்க முடியாத நிலை உருவானது. இறுதிப் போட்டி வரை சென்று இருந்தும் அவரால் பதக்கத்தை பெற முடியாமல் போனது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில் வினேஷ் போகத்துக்கு மிகப்பெரிய பாராட்டு விழா அரியானாவில் உள்ள கிராம பஞ்சாயத்து அமைப்புகள் சார்பில் நடைபெற்றது. அப்போது அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
அப்போது பேசிய வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போன போது நான் மிகவும் துரதிருஷ்டமானவள் என்று நினைத்தேன். ஆனால் இந்தியாவுக்கு திரும்பியபோது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அன்பையும், ஆதரவையும் அனுபவித்த பிறகு நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
எந்த பதக்கத்தையும் விட மேலான இந்த கவுரவத்துக்கு நான் எப்போதும் கடமைப்பட்டு இருப்பேன். எனது போராட்டம் முடியவில்லை. இப்போது தான் தொடங்கியுள்ளது. எங்கள் உள்ளிருப்பு போராட்டத்தின் போதே நாங்கள் அதை கூறினோம். இவ்வாறு அவர் பேசினார்.
-பவானி கார்த்திக்