இனி ஆட்டு ஈரல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க…!!
ஆட்டு ஈரல் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு சத்தான உணவுப் பொருள் ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர். ஆட்டு ஈரல் சாப்பிட மாட்டார்களா..? அப்படியானால் அடுத்தமுறை ஆட்டு ஈரலை கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி வறுவல் செய்யுங்கள்.
இதனால் பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த பக்குவத்தில் ஆட்டு ஈரலை சமைக்கும் போது, குழந்தைகள் போட்டிப் போட்டு சாப்பிடுவார்கள். இதற்கு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
ஆட்டு ஈரல் – 1/4 கிலோ
உப்பு – சுவைக்கேற்ப
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
தண்ணீர் – சிறிது
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
முதலில் ஆட்டு ஈரலை நன்கு சுத்தமாக நீரில் 5-6 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி, பூண்டு, பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து அதில் கழுவி வைத்துள்ள ஆட்டு ஈரலை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு கிளறி விட்டு, ஈரல் நீர் விட்டு வற்றும் வரை நன்கு மூடி வைத்து வேக வைத்து இறக்கிக் கொள்ளவும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியை சேர்த்து கிளறி மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி வேக வைக்க வேண்டும்.
அதன் பிறகு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி நன்கு வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் பாதியாக வேக வைத்துள்ள ஆட்டு ஈரலை அப்படியே சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து, மூடி வைத்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின்னர் 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அத்துடன் மீதமுள்ள மசாலா பொடி மற்றும் கரம் மசாலா, கொத்தமல்லியைத் தூவி கிளறி 3-4 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், சுவையான ஆட்டு ஈரல் வறுவல் தயார்…