பட்டாசு ஆலை வெடிவிபத்து…! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..! விபத்துக்கு காரணம்..?
விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த பந்த்வார்பட்டி கிராமம் அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன்(41) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஓர் அறையில் பட்டாசு தயாரிக்கத் தேவையான ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் பணியில் 4 பேர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரசாயன மூலப்பொருளின் உராய்வால் எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் பணியில் இருந்த 4 ஆண் தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அடுத்தடுத்து இருந்த பட்டாசு தயாரிப்பு அறைகளும் சேதமானது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சாத்தூர் தாலுகா போலீசார், சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பலியான நான்கு பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்