மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ எம்.பி திடீரென விலகியுள்ளார். தனது விலகலுக்கான காரணங்கள் குறித்து பெரிய அறிக்கை ஒன்று வெளியிட்டு விளக்கியுள்ளார். அதில், கூறப்பட்டிருப்பதாவது,
”அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ அவர்கள் திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கியிருந்த நான், உடனடியாக நாடு திரும்பினேன். தலைவருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர்,ஸ்டன்ட் வைக்கப்பட்டது.
இதனால் , சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது. வைகோ அவர்களுக்காக இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை தாங்கிக் கொண்டு தங்கள் கைப் பொருளை செலவிட்டு கட்சிக்காக உழைத்து வரும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சியை காப்பாற்றி வருகிறார்களே, அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். கொரோனா காலத்தில் மீண்டும் இயக்கத் தந்தை வைகோ அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
ஏழு, எட்டு மாதங்களுக்கு மேலாக வெளியே போக முடியாத அளவுக்கு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதன் பிறகும் , முன்பு போல பயணங்கள் மேற்கொள்ளவோ, கூட்டங்களில் வீர முழக்கம் செய்யவோ முடியாத நிலை தலைவருக்கு ஏற்பட்டது. எனவே, கட்சித் தெண்டர்களின் விருப்பத்தை நிறைவெற்றவே நான் அரசியலுக்கு வர வேண்டிய கட்டாயம் உருவானது. நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 106 பேரில் 104 பேர் நான் கழகத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். இப்படிதான் நான் அரசியலுக்கு வந்தேன்.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நிர்வாகக் குழுவில் கருத்துப் பரிமாற்றம் நடந்த போது, கிடைக்கிற ஒரு சீட்டை கட்சியில் சீனியராக இருக்கிற சிறப்பாக செயல்படுகிற விசுவாசம் மிக்க ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால், நூற்றுக்கு நூறு விழுக்காடு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என்னைதான் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தொடர்ந்து, தீப்பட்டி சின்னத்தில் நின்று திமுக கூட்டணி ஆதரவோடு வெற்றி பெற்றேன். திருச்சி மக்களுக்காக நான் என்னால் முடிந்த வரை உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
நம்முடைய இயக்கத் தந்தை அரசியலுக்கு வந்து இழந்ததுதான் அதிகம். தமிழ்நாட்டின் உரிமைக்கு போராடி வரும்” வாழ்நாள் போராளி”என்கிற விருது மட்டும்தான் அவருக்கு கிடைத்துள்ளது. மதுவிலக்கு போராட்டத்தில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது, எனது பாட்டி மாரியம்மாள் அதனாலயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது. அதை கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம்.
ஆனால், தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக ஒருவர் செய்து வருகிறார். நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு , அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர் “என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை. எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால், அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனையளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.