சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு நடைபெறும் நாளை மாற்ற வேண்டும் என கோரி மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா முடக்கத்தின் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டு, அண்மையில்தான் திறக்கப்பட்டுள்ளன. மேனிலைப்பள்ளித் தேர்வு எழுதுகின்ற மாணவர்கள் ஆயத்தம் செய்வதற்கு, குறுகிய காலமே கிடைத்து இருக்கின்றது.
சட்டக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, அனைத்து இந்திய அளவில் நடைபெறுகின்றது. வருகின்ற மே மாதம் 8 ஆம் நாள் அந்தத் தேர்வு நடைபெறுவதாக அறிவித்து இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் மேனிலைப்பள்ளித் தேர்வு எழுதுகின்ற மாணவர்களுள், சட்டக் கல்லூரிகளில் சேர விழைகின்ற மாணவர்களும், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் மேனிலைப் பள்ளித் தேர்வுகள், மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி, 23 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சட்டக் கல்வி நுழைவுத் தேர்வு நடைபெறுகின்ற நாளில் தேர்வு இல்லை என்றாலும், அதற்கு மறுநாள் 9 ஆம் தேதி ஒரு பாடத் தேர்வு இருக்கின்றது.
சட்டக்கல்வி நுழைவுத் தேர்வு எழுதுகின்ற மாணவர்கள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி போன்ற குறிப்பிட்ட மையங்களில்தான் எழுத வேண்டும். எனவே, 9 ஆம் தேதி மேனிலைத் தேர்வு எழுதுகின்ற மாணவர்கள், 7 ஆம் தேதி இரவிலேயே மேற்கண்ட ஏதேனும் ஒரு ஊருக்குப் பயணித்து, 8 ஆம் தேதி சட்டக் கல்வி நுழைவுத்தேர்வு எழுதிவிட்டு, மீண்டும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, மறுநாள், மேனிலைத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
வழக்கமாக, மேனிலைப்பள்ளித் தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும். சட்டக் கல்வி நுழைவுத் தேர்வு, மே மாதம் நடைபெறும். கொரோனா முடக்கத்தின் காரணமாக, பெரும்பாலான மாநிலங்களில், மேனிலைத் தேர்வுகள், மே மாத வாக்கில்தான் நடைபெறுகின்றன.
இரண்டு தேர்வுகளுக்கும் மாணவர்கள் நிறையப் படிக்க வேண்டும். எனவே, போதுமான இடைவெளி தேவை என்பதால், சட்டக் கல்வி நுழைவுத் தேர்வை வேறு தேதியில் மாற்றி அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.