ஹிஜாப் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து,ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம்’ என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர்.
அதன்பின்னர்,ஹிஜாப்புக்கு ஆதரவாக மற்றும் எதிராகவும் போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், விசாரணை முடியும் வரை ஹிஜாப் அல்லது காவித் துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களோடு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
இதையடுத்து, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக 6மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்நிலையில், ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ஹோலி விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.