ஈஸ்வரனை உபாசனை செய்வதன் மூலம் கிடைக்கும் வரம்..! மஹா பெரியவா சொன்னது..!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ஜகத்குரு பரமாச்சார்யாள், முடிகொண்டான் என்ற இடத்தில் முகாமிட்டிருந்த சமயம். ஒரு நாள் மாலை பூஜை நடப்பதற்கு முன்பு, ஸ்ரீ பரமாச்சார்யாள் அவர்களுக்கு கடும் ஜுரம் வந்துவிட்டது.
இந்த விஷயம் அங்கிருந்த பக்தர்களுக்குத் தெரியாது. ஸ்ரீ ஆசார்யாள் எல்லோரையும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யச் சொன்னார். பாராயணம் முடிந்தவுடன் ஸ்ரீ மகா பெரியவாள், சுருக்கமாக அனைவரையும் பார்த்து, “நீங்கள் அனைவரும் தவறாமல் விஷ்ணுவின் ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும்.
அரை மணிக்கு முன்பு எனக்கு கடுமையான ஜுரம். இப்போது நிவர்த்தியாகி விட்டது. நான் இப்போது ஸ்நானம் செய்து விட்டு தான் பூஜைக்கு உட்காரப் போகிறேன்” என்றார்கள். இதே போல, இரண்டாம் உலகப் போர் மிகக் கடுமையாக இருந்த நேரம், நாஸி ஜெர்மானியக் குண்டு சென்னையில் விழப் போகிறது என்ற நிலையில் சென்னையிலிருந்து பலர், தென் ஜில்லாக்களுக்குத் தங்கள் குடும்பத்தை அனுப்பி விட்டனர்.
சென்னை நகரம் முழுவதும் பீதியடைந்த தருணத்தில் ஸ்ரீ பரம ஆச்சாரிய சுவாமிகள், “அனைவரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். ஒரு ஆபத்தும் நமக்கு நேராது” என்று கூறினார்கள். அதன்படி, சென்னையில் பல இடங்களில், அன்பர்கள் பாராயணத்தில் ஈடுபட்டார்கள். யுத்தத்தினால், சென்னைக்கும் நம் தேசத்திற்கும் யாதொரு அபாயமும் ஏற்படவில்லை.
மஹா பெரியவா அருள்வாக்கு :
நம் பிறப்புக்குக் காரணம் காமம். அதாவது ஆசை. நம் இறப்புக்குக் காரணம் காலம். காலம் ஆகிவிட்டால் உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம் அழிந்து விடுகின்றன. ‘காலமாகி விட்டார்’ என்று சொல்லுவதன் அர்த்தம் இதுதான்.
ஈஸ்வரனோ காமத்தையும் காலத்தையும் வென்றவர். ‘காமனைக் கண்ணால் எரித்தவன்’ ‘காலனைக் காலால் உதைத்தவன்’ அல்லவா அவர்..? ஆகையால் பிறப்பும் இறப்பும் இல்லாத ஈஸ்வரனை உபாசனை செய்வதன் மூலம் நாம் பிறப்பு இறப்பு என்ற பிணிகளிலிருந்து தப்பலாம்.
-வீர பெருமாள் வீர விநாயகம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..