கேரளாவை உலுக்கிய நிலச்சரிவு..! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..! மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை..?
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் “இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் மிக பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கல்பட்டாவில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த இரண்டு நிலச்சரிவில் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியினை போலீசார், தீயணைப்பு துறையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த விபத்தில் தற்போது வரை 3 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து இருக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும் கோவை சூலூர் விமானப் படைத் தளத்தில் இருந்து விமானப் படையினர் இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் வயநாடு வரவழைக்கப்பட்டு தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த விபத்து குறித்து கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்., “மாநில சுகாதாரத்துறை மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளை திறக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு தேவையான உதவிகளை “8086010833, 9656938689” ஆகிய எண்ணிற்கு அழைத்து உதவி கேட்கலாம். வைத்திரி, கல்பட்டா, மேப்பாடி, மனந்தவாடி மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து நிலை சுகாதாரப் பணியாளர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மக்களை மீட்கும் பணி தீவிரமாக்கப்பட்டு இருப்பதால் உயிர் இழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை.
இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், கருத்து பதிவிட்டுள்ளார்.. அதில் அவர் கூறியதாவது. “பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். சிக்கிக் கொண்டவர்கள் விரைவில் மீட்கப்பட வேண்டும். மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இதில் அனைத்து ஏஜென்சிகளும் ஒன்றிணைந்து ஈடுபட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல் பிரதமர் மோடி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “வயநாடு நிலச்சரிவு சம்பவம் மிகவும் வேதனையை அளித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன்.
முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தொலைபேசியில் பேசினேன். தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ