ஜம்மு காஷ்மீரில் பாஹல்கம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 2019ம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு பிறகு, நடந்த மிகப் பெரிய தாக்குதல் இதுதான். எனவே, இந்தியா பாலகோட்டில் நடத்திய தாக்குதல் போல தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு நெருக்கமாகவுள்ள பாகிஸ்தான் தெற்கு கமாண்ட் பிரிவிலுள்ள விமானங்கள் லாகூர் மற்றும் ராவல்பிண்டி நகர பகுதிகளுக்கு இடமாற்றியுள்ளதாக தெரிகிறது. இவை, இந்தியாவுக்கு மிக நெருக்கமாகவுள்ள விமானப்படைத் தளங்கள் ஆகும். ராவல்பிண்டி விமானப்படைத் தளம் பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆஷில் பூஜி,சுலைமான் ஷா, அபு தலா என்ற 3 தீவிரவாதிகளின் வரைபடங்கள் வெளி வந்துள்ளது. மொத்தம் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் ஈடுபட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, இந்த தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் முழு கடை அடைப்பு நடந்து வருகிறது. ஸ்ரீநகரில் போலீஸ் தலைமையகம் முன்பு ஏராளமான மக்கள் கூடி, தீவிரவாதிகளை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோஷமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், சுற்றுலாப்பயணிகள்தான் ஜம்மு காஷ்மீருக்கு வருவாயை ஈட்டி தருகின்றனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்துவோ, இஸ்லாமோ அல்லா வேறுபாடு பார்ப்பதில்லை. இந்த நாட்டின் அமைதிதான் எங்களுக்கு முக்கியம் என்றனர்.