உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் தவித்தனர். மேலும் திடீரென பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து குடியாத்தம் அடுத்த வேப்பூர் கிராமத்தில் சாலையோரம் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அரசு பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்பட 20க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து குடியாத்தம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை யொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில் திடிரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால் நீண்ட நாட்கள் கழித்து பலத்த மழை பெய்த காரணத்தினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கலைக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குடிநீர் பைப் லைன் அமைத்தல், புதிய பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் முறையான கால்வாய் வசதி இல்லாததால் அரசு பள்ளி எதிரில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் நலன் கருதி உடனடியாக கழிவுநீரை அகற்றி கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.