உலக சிறுநீரக தினம் என்பது சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவிய பிரச்சாரமாகும். சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரித்தல், தடுப்பு நடவடிக்கைகள், ஆபத்தை தடுத்தல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை கையாளுதல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று – மார்ச் 9-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நமது அன்றாட பழக்கவழக்கங்கள் பல நமது சிறுநீரகத்தை சேதப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி நான் தவிர்க்க வேண்டிய 10 பழக்கவழக்கங்கள் குறித்து பார்க்கலாம்…
1. அதிக வலி நிவாரணிகளை பயன்படுத்துதல்:
சின்ன தலைவலிக்கு கூட மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்திவிடுங்கள். வலிநிவாரணிகளை தொடர்ந்து மற்றும் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தினால் அது உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்தக்கூடும்.
2. அதிக உப்பு உட்கொள்ளுதல்:
சோடியம் நிறைந்த அல்லது அதிக உப்பு கொண்ட உணவை உட்கொள்வது ஒருவரின் இரத்த அழுத்தத்தை நேரடியாக பாதிக்கிறது. இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பது உங்கள் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். உணவின் சுவையைக் கூட்ட உப்பிற்கு பதிலாக மசாலா அல்லது மூலிகை பொருட்களை பயன்படுத்தலாம்.
3. அதிக சர்க்கரை சாப்பிடுவது:
சர்க்கரை மற்றும் இனிப்புகள் மட்டுமல்ல, குக்கீகள், தானியங்கள் போன்றவை நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றை ஏற்படுத்தி மறைமுகமாக சிறுநீரகங்களை சேதப்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கின்றன.
4. போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது:
நீரேற்றம் இல்லாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்திற்கு ஆபத்தான விஷயம். நீர் உடலில் இருந்து சோடியம் மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை தவிர்க்கவும் உதவுகிறது. ஆரோக்கியமான சிறுநீரகம் உள்ளவர்கள் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
5. பதப்படுத்தப்பட்ட உணவைத் தொடர்ந்து சாப்பிடுதல்:
சோடியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த, பதப்படுத்தப்பட்ட உணவு சிறுநீரக நோய் உள்ளவர்களை எதிர்மறையாக பாதிக்கும். உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் இல்லாவிட்டாலும், தொடர்ந்து உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள், உயர் இரத்த சர்க்கரை போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
6. போதுமான அளவு தூக்கமின்மை:
சிறுநீரக செயல்பாடு தூக்க-விழிப்பு சுழற்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது 24 மணி நேரத்திற்கும் மேலாக சிறுநீரகங்களின் பணிச்சுமையை ஒழுங்குபடுத்துகிறது. எனவே மற்ற நன்மைகளுடன், ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கும் ஒரு நல்ல இரவு தூக்கம் அவசியம்.
7. புகைபிடித்தல்:
இதயம் மற்றும் நுரையீரல் மட்டுமல்ல, புகைபிடித்தல் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.புகைப்பிடிப்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் மற்றும் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
8. அதிகமாக மது அருந்துதல்:
ஒரு நாளைக்கு நான்கு கிளாஸுக்கு மேல் மது குடிப்பது நாள்பட்ட சிறுநீரக நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன. அதிக ஆல்கஹால் உட்கொள்வது யூரிக் அமிலத்தை உருவாக்குகிறது, இது சிறுநீரகத்தை பாதிக்கிறது. அதிக குடிப்பழக்கம் உள்ள புகைப்பிடிப்பவர்கள் சிறுநீரக நோய்களுக்கு இன்னும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
9. அதிகமாக இறைச்சி உண்பது:
விலங்கு புரதம் இரத்தத்தில் அதிக அளவு அமிலத்தை உருவாக்கலாம், இது சிறுநீரகங்களை சேதப்படுத்தும் மற்றும் அதிகப்படியான நுகர்வு அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும், சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து அமிலத்தை விரைவாக அகற்ற முடியாத நிலை. சமச்சீரான உணவை உண்ணுங்கள், மேலும் இறைச்சியுடன் பழங்கள் மற்றும் காய்கறிகளை நிறைய சேர்க்கவும்.
10. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது:
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது உங்கள் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். வழக்கமான உடற்பயிற்சி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்தமாக சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.