வீட்டிலேயே பிரசவம் பார்த்து மனைவி உயிரிழக்க காரணமான கணவர் – போலீசார், சுகாதாரத்துறையினர் விசாரணை.
கிஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே, மைலம்பட்டி லோகநாயகி, 27, மாதேஷ், 30, ஆகியோருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. லோகநாயகி இளம் வயது முதலே இயற்கை விவசாயம், இயற்கை உணவு மீது ஆர்வம் கொண்டவர்.
திருமணத்துக்கு பின் தம்பதி, இயற்கை உணவு பொருட்களையே சாப்பிட்டனர். தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை எவ்வித மருத்துவ சிகிச்சையின்றி, இயற்கையாக பிறக்க வேண்டும் என, கருவுற்ற பின்பும், லோகநாயகி மருத்துவ சிகிச்சை பெறாமல் இருந்தார்.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், வீட்டிலேயே லோகநாயகிக்கு கணவர் மாதேஷ், பிரசவம் பார்த்தார்; ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் லோகநாயகிக்கு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்தார்.
பெருகோபனபள்ளி வட்டார மருத்துவ அலுவலர் ராதிகா, போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.