இந்தியாவும் பாகிஸ்தானும் போரிடுகிறதோ இல்லையோ இஸ்லாமாபாத்தை ஒரு நாடு தொடர்ந்து ஆதரித்து வருகிறது. அதுதான், துருக்கி. இந்த நாட்டின் அதிபராக எர்டோகன் பொறுப்பேற்றதில் இருந்து , இந்தியாவுடனான உறவு மோசமடைந்து கொண்டே வருகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை இந்தியா ரத்து செய்ததை துருக்கி எதிர்த்தது . ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலிலும் துருக்கி காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாக கருத்து தெரிவித்தது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை துருக்கி கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது. துருக்கியும் பாகிஸ்தானும் நீண்டகால ராணுவ உறவுகளைக் கொண்டுள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தை நவீனமயமாக்க துருக்கி உதவி கொண்டுதான் இருக்கிறது.
இதன் காரணமாக பல நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கும் பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் ஒரு முறைகூட தனிப்பட்ட பயணமாக துருக்கி சென்றதில்லை. கடந்த 2015ம் ஆண்டு துருக்கியில் நடந்த ஜி 20 நாடுகள் மாநாட்டுக்காக மட்டுமே ஒரே ஒருமுறை பிரதமர் மோடி துருக்கி சென்றுள்ளார்.
துருக்கி மீதுள்ள கடுப்பில்தான் இந்தியா துருக்கியின் எதிரி நாடுகளான இஸ்ரேல் , கிரீஸ், சைப்ரஸ் மற்றும் ஆர்மீனியா போன்ற நாடுகளுடன் நெருங்கிய நட்பை கொண்டுள்ளது. இந்த நாடுகள் அனைத்தும் புவியியல் ரீதியாக துருக்கியைச் சுற்றியுள்ளன. ஆர்மீனியாவுக்கு இந்தியா ஆயுதங்களையும் ஏற்றுமதி செய்து வருகிறது. நீங்கள் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு குரல் கொடுக்கப் போகிறீர்கள் என்றால், நாங்கள் பதிலுக்கு இதைச் செய்வோம்” என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. துருக்கி செல்வாக்கை தகர்ப்பதற்காகவே,இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இஸ்லாமிய உலகில் துருக்கி பலம் பொருந்திய நாடாக இருப்பதை எர்டோகன் விரும்புகிறார். இதனால், எர்டோகன் சவுதி அரேபியா போன்ற நாடுகளின் செல்வாக்கை குறைக்கவும் முயற்சித்து கொண்டிருக்கிறார். . 2017 மற்றும் 2021 ம் ஆண்டுகளில் பல அரபு நாடுகள் கத்தார் மீது மீது பொருளாதார தடை விதித்தன. இந்த தருணத்தில் துருக்கி ராணுவ வீரர்களை அங்கு அனுப்பி கத்தாரை ஆதரித்தது .
இப்போது, அந்த வகையில், துருக்கி மற்றொரு காரியத்தை செய்துள்ளது. பஹால்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்படலாம் என்கிற நிலையில் தனது போர்க் கப்பலை கராச்சிக்கு அனுப்பியுள்ளது. துருக்கி கடற்படையின் TCG Büyükada, என்ற போர்க்கப்பல் கராச்சி வந்தடைந்துள்ளது. எந்த சூழலிலும் பாகிஸ்தானுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த கப்பலை துருக்கி அனுப்பியதாக தெரிகிறது. பாகிஸ்தான் கடற்படையுடன் இணைந்து துருக்கி கப்பலும் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.
இது மட்டுமல்ல, பாகிஸ்தானுக்ககாக 4 போர்க்கப்பல்களை துருக்கி கட்டிக் கொண்டிருக்கிறது. இதில், பி.என்.எஸ் பாபர் என்ற போர்க்கப்பலில் கட்டுமானம் முற்றிலும் நிறைவடைந்து விட்டது- இது தவிர, ராணுவ சரக்கு விமானமான சி- 130 கராச்சி வந்துள்ளதாகவும் அதில் பாகிஸ்தானுக்கு ஏராளமான ஆயுதங்களை துருக்கி அனுப்பி வைத்தாகவும் தகவல் உள்ளது. ஆனால், இந்த தகவலை துருக்கி மறுத்துள்ளது. ராணுவ சரக்கு விமானம் எரிபொருள் நிரப்ப தரையிறங்கியதாகவும் பின்னர் துருக்கி நோக்கி பறந்து சென்று விட்டதாகவும் கூறியுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில், 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போர் போல, இனிமேல் வரும் போர்களை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. போர் ஏற்பட்டால் துருக்கி போன்ற நாடுகள் நிச்சயமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக வரும். சீனாவை பற்றி சொல்லவே வேண்டாம். வங்கதேசத்தையும் நம்ப முடியாது. அப்படியிருக்கையில்,. ராஜதந்திரத்துடன் பாகிஸ்தான் விஷயத்தை கையாள்வதே நமக்கு பயன் அளிக்கும்.