காகத்திற்கு உணவு அளித்தால் என்ன நன்மை கிடைக்கும்..? தெரிவோம் அறிவோம்-8
பொதுவாக காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி உண்டு. ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது, கெட்டதை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தி காகத்திற்கு உண்டாம்.
அப்படிப்பட்ட காகத்திற்கு உணவுகளை படைத்தால் நமக்கு நன்மை நடக்கும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
காகத்திற்கு சாதம் வைக்கும் போது இந்த அற்புதமான சுலோக பலி மந்திரத்தை சொல்லுங்கள்….!
தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு சோறு வைப்பது வழக்கம். அதற்கு முன் இந்த பலி மந்திரம் சொல்லி உணவு வைப்பது மாபெரும் சிறப்பான
ஒன்றாகும்.
பெருமாள் பக்தர்கள்,
“பலிர் விபீஷணோ பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜுன!
மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா!”
என்று சொல்லி சோறு இட வேண்டும்….
(மகாபலி, விபீஷணர், பீஷ்மர், கபிலர், நாரதர், அர்ஜுனர் முதலிய விஷ்ணு பக்தர்கள் இந்த விஷ்ணு பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளட்டும் என்று சொல்லி வழிபடலாம்.)
சிவ பக்தர்கள்,
“பாண ராவண சண்டேஸ நந்தி ப்ருங்கி ரிடாதய!
மஹாதேவ ப்ரஸாதோயம் க்ருஹ்ணந்து ஸாம்பவா”
என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்…..
(பாணாசுரன், ராவணன், சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், பிருங்கி முனிவர் முதலிய சிவனடியார்கள் இங்கு வைத்திருக்கும் சிவ பிரசாதத்தை அன்புடன் ஏற்க வேண்டும்) என்பது இதன் பொருள்.
இரண்டையும் சேர்த்தும் கூட சொல்லலாம்…..
பொதுவாக காகத்திற்கு மனிதர்களைப் போல தீட்டை கடைபிடிக்கிற வழக்கம் உண்டு.
உதாரணமாக ஒரு காக்கை இறந்து விட்டால் அதனை சுற்றி மற்ற காக்கைகள் கூடி கூச்சலிடும். பின்னர் அவை அனைத்தும் ஒரு நீர்நிலைக்கு சென்று தலைமுழுகி குளிக்கும்.
இப்படி மனிதர்களுக்கு இணையாக தீட்டை கடைபிடிக்கிற வழக்கம் கொண்டுள்ள காகத்திற்கு தீட்டுடன் உணவு அளிக்கக்கூடாது.
காகத்திற்கு உணவு வைக்கும் போது அதனுடன் தண்ணீரும் சேர்த்து வைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. அமாவாசை அன்று மட்டும் எள் கலந்த சாதம் வைக்கலாம். மற்ற நாளில் தயிர் கலந்து வைப்பது ரொம்பவே சிறப்பானது.
சாதாரணமாக சாப்பாடு வைக்கும் பழக்கம் இருக்கின்றவர்கள் காகம் சாப்பிடாமல் போவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அதற்குப் பிடிக்கவில்லை போல என்று கடந்து விடுவார்கள்.
இதுவே பரிகாரத்திற்காகவோ அல்லது பித்ருக்களான முன்னோர்களுக்காகவோ உணவை வைப்பவர்கள் அது சாப்பிடாமல் போனால், ஒரு நிமிடம் அப்படியே மனம் பெரும் குழப்பத்திற்குள் போய் விடும். எதனால் சாப்பிடாமல் போகிறது என்ற குழப்பமும் ஏதேனும் நாம் தவறு செய்து விட்டோமோ என்ற பயமும் தொற்றிக் கொள்ளும்.
பித்ருக்களாக நாம் நினைக்கும் காகம் நாம் வைக்கும் உண்வை எடுக்காமல் போகிறது என்றால், நம்முடைய முன்னோர்கள் நம் மீது அதிக கோபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
அதாவது நாம் வழக்கமாக முறையாக நம்முடைய பித்ருக்களுக்குத் திதி கொடுக்கிறீறோமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அதனால் கூட, நம்மீது மீது கோபமாக இருக்கலாம்.
வீட்டில் இறந்து போன முன்னோர்களான பித்ருக்களுக்கு திதி கொடுப்பது என்பது மிக முக்கியம். சிலருக்கு முன்னோர்களின் இறந்த தேதி தெரியாமல் இருக்கும். அதனால் கூட, சிலர் திதி கொடுக்காமலே இருப்பார்கள். இறந்த தேதி மறந்து போனால் கூட பரவாயில்லை.
புரட்டாசி, தை, ஆடி அமாவாசை ஆகிய இந்த மூன்று அமாவாசை நாட்களில் பித்ருக்களை நினைத்து வழிபட்டு, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய திதியைக் கொடுக்கலாம். அப்படி நாம் திதி கொடுக்கத் தவறினால் கூட காகம் வந்து நாம் வைக்கும் சாதத்தை எடுக்காது.