உக்ரைனிலிருந்து இதுவரை 22,500 இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளோம் என மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 20 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வின் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களின் மீட்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் இன்று(மார்ச்.15) அறிக்கை தாக்கல் செய்தார்.
இது குறித்து பேசிய அவர், உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் கங்கா திட்டம் தொடங்கப்பட்டது. கடும் சவால்களுக்கு இடையே உக்ரைனிலிருந்து 22,500க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசம், கேரளம், தமிழகம், கர்நாடகம், ராஜஸ்தான், பிகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகளவிலான மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்திற்கான விமானங்கள் பிப்ரவரி 23ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் மொத்தம் 90 விமானங்கள் இயக்கப்பட்டன.
இந்தியா விமானப் படையின் 14 விமானங்களும், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களின் 76 விமானங்களும் மாணவர்களை மீட்க பயன்படுத்தப்பட்டுள்ளன.
உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு இந்தியர்கள் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் உதவி செய்துள்ளனர். மேலும், அண்டை நாடுகளில் இந்தியர்களை மதிப்புடன் நடத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
உக்ரைன் போரில் எதிர்பாராத விதமாக கர்நாடகத்தை சேர்ந்த ஒரு மாணவர் பலியாகியுள்ளார். அவரின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், காயமடைந்த ஒரு மாணவர் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.